பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 10 பேர் பலி - தலா ரூ.3 லட்சம் இழப்பீடு அறிவித்த முதல்வர் ஸ்டாலின்

பட்டாசு ஆலை வெடிவிபத்தில் 10 பேர் பலி - தலா ரூ.3 லட்சம் இழப்பீடு அறிவித்த முதல்வர் ஸ்டாலின்
விருதுநகர் பட்டாசு ஆலை விபத்து இழப்பீடு அறிவிப்பு
விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் மற்றும் நிதியுதவி தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு.

விருதுநகர் மாவட்டம்வெம்பக்கோட்டை தனியார் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.3 லட்சம் நிதியுதவி அறிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தியில், “ விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டை வட்டம் குண்டாயிருப்பு கிராமத்தில் இயங்கி வந்த தனியாருக்குச் சொந்தமான பட்டாசு ஆலையில் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட வெடிவிபத்தில் 6 ஆண்கள் மற்றும் 4 பெண்கள் உட்பட 10 நபர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன்.

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் மற்றும் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆகிய இருவரையும் சம்பவ இடத்திற்கு அனுப்பி மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளேன். இவ்விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்வதோடு, அவர்களது குடும்பத்தினருக்கு தலா மூன்று இலட்சம் ரூபாயும், பலத்த காயமடைந்தவருக்கு ஒரு இலட்சம் ரூபாயும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன்” என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags

Next Story