திருச்செங்கோடில் 1008 லிங்கபூஜை மற்றும் கன்னியா வந்தன பூஜை
திருச்செங்கோடு தேசிய சிந்தனை பேரவை சார்பில் தமிழ் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு 1008 சிவலிங்க பூஜை மற்றும் கன்னியா வந்தனம் நிகழ்ச்சி நடைபெற்றது . தேசிய சிந்தனை பேரவை தலைவர் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற இந்த பூஜையில் ரங்கா வித்யாலயா பள்ளியின் தாளாளர் எஸ் எஸ் சக்திவேல் அனைவரையும் வரவேற்றார்.
திருச்செங்கோடு முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் சௌந்தரம், முன்னாள் ராஜ்யசபா உறுப்பினர் டாக்டர் கே பி ராமலிங்கம், திரைப்பட இயக்குனர் விஜய் கிருஷ்ணராஜ்,தொழிலதிபர் நித்ய சதானந்தா அறங்காவலர் குழு உறுப்பினர் கார்த்திகேயன், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். மண்டபத்தின் முகப்பில் அகண்ட மகா தீபம் ஏற்றி வைக்கப்பட்டது. முன்னதாக 21 பெண் குழந்தைகள் அலங்கரிக்கப்பட்டு வரிசையாக நிற்கவைக்கப்பட்டு அவர்களுடைய பாதத்திற்கு பால் சந்தனம் மஞ்சள் கொண்டு அபிஷேகம் செய்து கன்னியா வந்தன நிகழ்ச்சி நடைபெற்றது. திருமண பிரார்த்தனை மற்றும் குழந்தை பாக்கியம் வேண்டுவோர் இந்த குழந்தைகளின் பாதத்தை தொட்டு வணங்கி ஆசி பெற்றனர்.
குழந்தைகளுக்கு பட்டுப்பாவாடை சட்டை மஞ்சள் குங்குமம் வளையல் உள்ளிட்ட 51 சீர்வரிசை பொருட்கள் வழங்கப்பட்டது. பின்னர் 1008 சிவலிங்க பூஜை நடைபெற்றது. பாம்பு சித்தர் நாயகம் பால் அபிஷேகம் செய்து பூஜையை துவக்கி வைத்தார். 1008 குடும்பத்தினருக்கும் தனித்தனியாக மண்ணால் செய்யப்பட்ட சிவலிங்கம் கங்கை தீர்த்தம் காசி மிட்டாய் மாவு உருண்டை பிரசாதம் உள்ளிட்ட பல்வேறு மங்களப் பொருட்கள் வழங்கப்பட்டு சிவ நாம அர்ச்சனை நடைபெற்றது.
பாடல் பெற்ற சிவாலயங்களில் உள்ள இறைவனின் பெயரை அனைவரும் அர்ச்சனை செய்து வழிபட்டனர். உலக அமைதி மற்றும் மழை பொழிவிற்காக கூட்டுப் பிரார்த்தனை நடைபெற்றது. விழாவின் சிறப்பு விருந்தினராக இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜுன் சம்பத் கலந்து கொண்டு சிவலிங்க பூஜையில் பலன்கள் பற்றி ஆன்மீக உரையாற்றினார். அனைவருக்கும் அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது. முடிவில் தேசிய சிந்தனை பேரவை செயலாளர் மனோகரன் மற்றும் மோதிலால் நன்றி கூறினர்.