14 ஆம் நூற்றாண்டு முருகன் சிலை கண்டெடுப்பு

அரியலூரில் பதினொன்றாம் நூற்றாண்டு முருகன் சிலை கண்டெடுத்துள்ளனர்.

அரியலூர், மே.5 - ஆண்டிமடம் அருகே பழமை வாய்ந்த சிவன் கோவிலில் கட்டிடப் பணிகள் தோண்டும் போது கிடைத்த வள்ளி தேவசேனா சமேத முருகனை பக்தர்கள் வணங்கி செல்கின்றனர். அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் அருகே கூவத்தூர் கிராமத்தில் பழமை வாய்ந்த காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது. நூற்றாண்டுகள் கடந்த பிரசித்தி பெற்ற இந்த கோவிலை புணரமைத்து கும்பாபிஷேகம் நடத்த கிராம மக்கள் முடிவு செய்தனர். இத்திருப்பணிகளுக்காக பழைய கோவிலை அகற்றிவிட்டு, புதுப்பிக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. கோவிலின் அஸ்திவாரத்திற்கு அடியில் குழி தோண்டும் பொழுது, பூமிக்கு அடியில் இருந்து வள்ளி தேவசேனா சமேத முருகன் கற்சிலை கண்டெடுக்கப்பட்டது. கோவில் அடிவாரத்தில் கிடைத்த முருகன் சிலை கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டுள்ளது. முருகன் சிலை கண்டெடுக்கப்பட்டதை அறிந்த பொதுமக்கள் கோவிலுக்கு வருகை தந்து வள்ளி தேவசேனா சமேத முருகன் சுவாமியை வழிபாட்டு சென்று வருகின்றனர்.

கண்டெடுக்கப்பட்ட சிலை குறித்து அரியலூர் அரசு கலைக் கல்லூரி வரலாற்றுத்துறை தலைவர் ரவியிடம் கேட்ட பொழுது, வள்ளி தேவசேனா சமேத முருகன் சிலையை பார்க்கும்பொழுது இது பிற்கால பாண்டியர்களின் வடிவமைப்பை ஒத்துள்ளது. கங்கைகொண்ட சோழபுரத்தை 250 ஆண்டுகள் தலைநகராக கொண்டு சோழ வம்சம் ஆட்சி செய்தது. இவர்களுக்குபிறகு இப்பகுதி 14 ஆம் நூற்றாண்டில் பிற்கால பாண்டியர்கள் வசம் இருந்தது. அவர்கள் சோழர்கள் கட்டிய கோயிலை சீரமைத்த பொழுது தங்கள் பாணியில் கற்சிலைகளில் தெய்வங்களை வடிவமைத்து வழிபாடு செய்தனர். தற்பொழுது கிடைத்துள்ள வள்ளி தேவசேனா சமேத முருகன் கற்சிலை பிற்கால 14 ஆம் நூற்றாண்டு பாண்டியர்கள் ஆட்சி காலத்தின் வடிவமைப்பு கொண்டுள்ளது என்று கூறினார். கூவத்தூர் கிராம மக்கள் தாங்கள் திருப்பணி மேற்கொண்டுள்ள பொழுது கிடைத்துள்ள வள்ளி தேவசேனா சமேத முருகன் கற்சிலையால் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Tags

Read MoreRead Less
Next Story