விபத்தில் இறந்த 15 பேர் ஆவி உலவுவதாகப் பீதி - 6 மணிக்குமேல் வெறிச்சோடும் சாலை
செங்கம்-பெங்களூர் சாலை
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம்-பெங்களூர் செல்லும் சாலை பக்கிரிபாளையம் காந்தி நகர் பகுதியில் கடந்த 15ம் தேதி மலையனுார் சென்று சுவாமி தரிசனம் செய்து விட்டு பெங்களூர் சென்ற கார் விபத்தில் சிக்கியது. அதில் பயணம் செய்த குழந்தை, பெண்கள் உட் பட 8 பேர் பலியானார்கள். இதைத்தொடர்ந்து அதே பகுதியில் சுமார் 100 மீட் டர் தூரத்தில் கடந்த 23ம் தேதி இரவு நடந்த சாலை விபத்தில் அசாம் மாநிலத்தை சேர்ந்த 9 பேர் பலியானார்கள். மேலும் அப்பகுதியில் அடிக்கடி இருசக்கர வாகனம், கார், போன்ற வாகனங்கள் பஸ் விபத்தில் சிக்குவது தொடர் கதையாகியுள்ளது. சமீபத்தில் நடந்த இரண்டு சாலை விபத்து களில் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள் மற்றும் ஆசாம் மாநிலத்தை சேர்ந்த திருமணம் ஆகாத இளை ஞர்கள் இறந்துள்ளதால், அவர்களின் ஆன்மா அப்பகுதியில் சுற்றித்திரிவதாகவும், மாலை 6 மணிக்கு மேல் அப்பகுதியில் திடீர் சுழற்காற்று, அலறல் சத்தம் கேட்பதாக அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனால் அந்தனூர், பக்கிரிபாளையம் காந்தி நகர், குமாங்குளம் கிராமத்தை சேர்ந்த மக்கள் மாலை 6 மணிக்குமேல் வீட்டை விட்டு வெளியில் வருவதற்கே தயங்குகின்றனர். அப்பகுதியில் உள்ள விவசாயிகளும் விளைநி லங்களுக்கு இரவு நேரத்தில் செல்வதில்லையாம். குறிப்பாகக் கருமாங்குளம் பகுதியில் உள்ள டாஸ்மாக் கடை மற்றும் அப்பகுதியில் உள்ள மூன்று தாபா ஓட்டல்களில் மாலை 6 மணிக்கு மேல் மக்கள் நடமாட்டமே இல்லை என்கின்றனர். ஓட்டல்களுக்கு வெளியூரில் இருந்து வரும் நபர்கள் மற்றும் விபத்து குறித்து தெரியாதவர்கள்தான் வந்து செல்கின்றனராம். இதனால் அப்பகுதியில் இரவு நேர வியாபாரம் பாதிக்கப்படுவதோடு, கிராம மக்கள் மிகவும் பீதியடைந்துள்ளனர். எனவே, மக்களின் அச்சத்தை போக்க அரசு உரிய நடவடிக்கை எடுத்து அப்பகுதி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.