சிம்ஸ் பூங்காவில் 150வது பழக்கண்காட்சி
நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் சுற்றுலாப் பயணிகளை கவர கோடை விழா நடத்தப்படுகிறது. இதில் மலர் கண்காட்சி, ரோஜா கண்காட்சி, வாசனை பொருள் கண்காட்சி, படகு போட்டி, காய்கறி கண்காட்சி, பழக் கண்காட்சி உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்படும். இந்த ஆண்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் மலர், ரோஜா மற்றும் பழக் கண்காட்சிகள் மட்டுமே நடத்தப்படுகிறது. வழக்கமாக 3 முதல் 5 நாட்கள் நடைபெறும் மலர் கண்காட்சி இந்த ஆண்டு முதல் முறையாக 10-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் கடைசி நாளான நேற்று கண்காட்சி வரும் 26-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் 64-வது பழக் கண்காட்சி குன்னூர் சிம்ஸ் பூங்காவில் வரும் 24-ம்தேதி தொடங்கி 3 நாட்கள் நடைபெற உள்ளது.
குன்னூர் சிம்ஸ் பூங்கா தொடங்கி 150 ஆண்டுகள் நிறைவடைவதால் இந்த ஆண்டு 150 வகை பழங்களை காட்சிப்படுத்தவும், அலங்காரங்களில் சிறப்பு அம்சங்கள் ஏற்படுத்தவும் தோட்டக்கலைத் துறையினர் திட்டமிட்டு உள்ளனர். இது குறித்து குன்னூர் சிம்ஸ் பூங்கா நிர்வாகி விஜயலட்சுமி கூறியதாவது: குன்னூரிலுள்ள சிம்ஸ் பூங்கா 1874-ம் ஆண்டு தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த பூங்கா ரம்மியமான பள்ளதாக்கின் அடிவாரத்தில் கடல் மட்டத்திலிருந்து 1780 முதல் 1790 மீட்டர் உயரத்தில் உள்ளது . 12 எக்டர் பரப்பில் உள்ள இந்த பூங்காவில் 86 தாவரக் குடும்பங்களை சார்ந்த 1200 வகையான தாவரங்கள் உள்ளன. சிம்ஸ் பூங்கா தொடங்கி 150 ஆண்டுகள் ஆவதால் இந்த ஆண்டு 150 வகை பழங்கள் காட்சிப்படுத்தப்பட உள்ளது. குறிப்பாக நீலகிரியில் உள்ள பிளம்ஸ், மங்குஸ்தான் உள்ளிட்ட பழங்களுக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படும். தற்போது பந்தல் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. மொத்தம் 5 டன் பழங்களால் அலங்காரங்கள் செய்யப்பட உள்ளன. இவ்வாறு அவர் கூறினார்.