குடிப்பழக்கத்திற்கு சிகிச்சை வாலிபர் மர்மசாவு: 2 பேர் கைது
உயிரிழந்த வாலிபர்
சேலம் மாவட்டம் இளம்பிள்ளை அருகே உள்ள நடுவனேரி பகுதியை சேர்ந்த கந்தசாமி மகன் சந்திரசேகரன் (வயது 29). பட்டதாரியான இவர் ஜவுளி தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் சந்திரசேகரனுக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவர் மது குடித்து விட்டு குடும்பத்தினரிடம் தகராறு செய்து வந்ததாக தெரிகிறது.
இதற்கிடையே சந்திரசேகரனை குடி பழக்கத்தில் இருந்து மீட்டு வெளியில் கொண்டு வர அவரை குடும்பத்தினர் இளம்பிள்ளையில் உள்ள மறுவாழ்வு மையத்தில் சேர்த்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சந்திரசேகரனுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் அவரை சீரகாபாடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து பார்த்தபோது சந்திரசேகரன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இதுகுறித்து மகுடஞ்சாவடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் மருத்துவமனைக்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் ரகு ஆகியோர் மர்மசாவு என வழக்குப்பதிவு செய்து மறு வாழ்வு மையத்தை நடத்தி வந்த பூபதி (32), அங்கு வேலை பார்த்த கிருஷ்ணராஜ் (30) ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.