வாரியத்தில் 25 லட்சம் தொழிலாளர்கள் புதிதாகப் பதிவு : பொன்.குமார் தகவல்
கட்டுமானத் தொழிலாளர் நல வாரியத்தில் 25 லட்சம் தொழிலாளர்கள் புதிதாகப் பதிவு செய்துள்ளனர் என்றார் தமிழ்நாடு கட்டுமான தொழிலாளர் நல வாரியத் தலைவர் பொன். குமார். தஞ்சாவூரில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி, தமிழகக் கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கம், அமைப்புசாரா தொழிலாளர் மத்திய சங்கத்தின் மாவட்டச் செயல் வீரர்கள் கூட்டத்தில் பங்கேற்ற அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது, தமிழக முதல்வராக ஸ்டாலின் பொறுப்பேற்ற பிறகு கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் அதிமுக ஆட்சிக்காலத்தில் நிலவிய பல்வேறு பிரச்னைகளுக்கு தீர்வு காணப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.
அனைத்து திட்ட உதவிகளும் இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது. வீடு கட்டும் திட்டம், நோயாளிகளுக்கான மாதம் ரூ. ஆயிரம் வழங்கும் திட்டம், மருத்துவக்கல்லூரியில் படிக்கும் மாணவிகளுக்கு அனைத்துக் கட்டணங்களும் ஏற்கும் திட்டம் போன்ற புதிய திட்டங்களை அறிவித்து, தொழிலாளர்களுக்கான பாதுகாப்பை உறுதிப்படுத்துவதில் இந்த அரசும், முதல்வரும் மிகுந்த கவனம் செலுத்துகின்றனர்.
இதன் மூலம் வாரியத்தில் கடந்த 2 ஆண்டுகாலத்தில் 25 லட்சம் தொழிலாளர்கள் புதிதாகப் பதிவு செய்துள்ளனர். தொழிற் சங்க நிர்வாகிகள் முறையாகச் செயல்பட்டு, உண்மையான தொழிலாளர்களைப் பதிவு செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்காக ஆங்கிலேயர் காலத்தில் போடப்பட்ட 44 சட்டங்களை மத்திய அரசு கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு ஆதரவாக 4 சட்டங்களாக மாற்றியுள்ளது.
தமிழ்நாட்டில் உடல் உழைப்புத் தொழிலாளர் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்டுள்ள 18 வகையான அமைப்புசாரா வாரியங்களைக் கூட மத்திய அரசு தன்னுடைய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வர சட்டம் இயற்றியுள்ளது. இதற்கு பிற மாநிலங்கள் ஒப்புதல் வழங்கியிருந்தாலும், தமிழக முதல்வர் ஒப்புதல் வழங்காமல், தமிழ்நாட்டுச் சட்டங்களின்படி வாரியங்கள் செயல்படும் என அறிவித்திருப்பது மன நிறைவைத் தருகிறது.
இதற்காக தமிழக முதல்வருக்கு நன்றியும், பாராட்டும் தெரிவித்துக் கொள்கிறோம். மத்திய அரசு தொடர்ந்து மாநில அரசை வஞ்சித்து வருகிறது. எனவே, வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் மோடி அரசு தோற்கடிக்கப்பட்டால்தான், அது தொழிலாளர்களுக்கான பாதுகாப்பான அரசாக இருக்கும். இதற்கான முயற்சியை இந்த அமைப்பு எடுக்கும்" என்றார் பொன். குமார்.