ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் 2வது நாளாக வருமானவரித் துறை சோதனை
வருமான வரித்துறையினரின் வாகனங்கள்
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அருகே வடகுப்பம் பகுதியில் உள்ள ஆந்திர மாநில அரசுக்கு சொந்தமான மலைப் பகுதியில் எம்.ஜி.லதா என்பவரின் கல்குவாரி செயல்பட்டு வருகின்றது. தமிழகப் பகுதியில் கல் உடைப்பு இயந்திரம் மற்றும் தளவாடங்கள் அமைத்து ஜல்லி, கிராவல் லாரிகள் மூலம் தச்சூர் முதல் சித்தூர் வரை தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக பயன்படுத்தப்பட்டு வருகிறது .
இந்நிலையில் வருமானவரித்துறையினர் 10க்கும் மேற்பட்டோர் இரு குழுக்களாக தச்சூர் சித்தூர் தேசிய நெடுஞ்சாலை பணிகளுக்காக புண்ணியம் பகுதியில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ள ஒப்பந்ததாரர் அலுவலகம் மற்றும் கல்குவாரியில் நேற்று முன்தினம் சோதனை மேற்கொண்டனர். இரண்டாவது நாளாக நேற்று தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் சோதனையில் ஈடுபட்டனர்.
கல் குவாரி மற்றும் தச்சூர் சித்தூர் தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் முறையாக வருமான வரி செலுத்தவில்லை என்ற குற்றச்சாட்டு அடிப்படையில் நடைபெற்ற திடீர் சோதனையில் பல முக்கிய ஆவணங்களை வருமானவரித் துறையினர் கைப்பற்றியதாக தெரிகிறது. தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர் அலுவலகத்தில் தொடர்ந்து இரண்டு நாட்களாக வருமானவரித்துறையினர் சோதனை மேற்கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.