மோடி அரசுக்கு எதிரான 2-வது நம்பிக்கையில்லா தீர்மானம்

மோடி அரசுக்கு எதிரான 2-வது நம்பிக்கையில்லா தீர்மானம்

நம்பிக்கையில்லா தீர்மானம் 

2018-ல் கட்டியணைத்த ராகுல் காந்தி... இன்று என்ன செய்வார் ???

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய பாஜக அரசு மீதான 2-வது நம்பிக்கை இல்லா தீர்மானம் அதாவது மணிப்பூர் விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டுவந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதம் இன்று தொடங்க உள்ளது. இந்த விவாதத்தை எதிர்க்கட்சிகளின் தரப்பில் ராகுல் காந்தி தொடங்கி வைத்து பேசுகிறார்.

கடந்த 2018-ல் நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதத்தில் பேசி முடித்தவுடன் பிரதமர் மோடியை கட்டியணைத்து பரபரப்பை கிளப்பிய ராகுல் காந்தி இன்று என்ன செய்வார் என்கிற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

ராகுல் காந்தி, மனீஷ் திவாரி, கவுரவ் கோகோய் ஆகியோரும் காங்கிரஸ் சார்பில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது உரையாற்றவுள்ளதாக அக்கட்சித் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாஜக சார்பில் நிஷாந்த் துபே விவாதத்தின் முதல் பேச்சாளராக இருப்பார் என அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பல்வேறு அரசியல் பரபரப்புக்கு மத்தியில் கடந்த மாதம் நடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கூடியது. நடாளுமன்றம் கூடுவதற்கு முந்தைய நாள் மணிப்பூரில் பழங்குடியின பெண்கள் ஆடைகள் இன்றி இழுத்துச்செல்லப்பட்ட வீடியோ ஒட்டு மொத்த தேசத்தையும் அதிரவைத்தது. இந்த விவகாரம் நாடாளுமன்றத்திலும் எதிரொலித்தது.

இதனையடுத்து மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. இத்தீர்மானத்தின் மீது இன்று விவாதம் தொடங்க உள்ளது.

137 நாட்களுக்கு முன்னர் ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டதால் அவருடைய எம்பி பதவி பறிக்கப்பட்டது. இது தொடர்பான மேல்முறையீட்டு மனு மீதான உச்சநீதிமன்றத் தீர்ப்பால் நேற்றுதான் ராகுல் காந்தி எம்பி பதவி திரும்ப வழங்கப்பட்டது. இந்த நிலையில் ராகுல் காந்தியின் இன்றைய பேச்சு மிகவும் உன்னிப்பாக கவனிக்கப்பட இருக்கிறது.

2018-ம் ஆண்டு தெலுங்கானா தனி மாநில உருவாக்கத்தினால் ஆந்திராவுக்கு ஒதுக்கப்படும் என உறுதியளிக்கப்பட்ட சிறப்பு நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. இதனையடுத்து பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசுக்கு எதிராக தெலுங்குதேசம் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தது. இத்தீர்மானத்தின் மீது மொத்தம் 12 மணிநேரம் விவாதம் நடைபெற்றது.

2018-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட நம்பிக்கை இல்லா தீர்மானத்துக்கு எதிராக 325 எம்.பி.க்கள் வாக்களித்தனர். இத்தீர்மானத்தை மொத்தம் 126 எம்.பி.க்கள் மட்டுமே ஆதரித்தனர். இதனால் தெலுங்குதேசம் கொண்டு வந்த 2018-ம் ஆண்டு நம்பிக்கை இல்லா தீர்மானம் தோல்வி அடைந்தது.

இன்று நடக்கவிருக்கும் விவாதத்தின்போது மணிப்பூர் விவகாரம் குறித்து மத்திய அரசு தரப்பில் நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்கப்பட உள்ளது. மத்திய அரசு தரப்பில் உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய மந்திரிகள் நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, ஜோதிராதித்ய சிந்தியா, கிரண் ரிஜிஜூ ஆகியோரும், 5 எம்.பி.க்களும் விளக்கம் அளிக்க உள்ளனர். 5 எம்.பி.க்களில் பெரும்பாலானோர் வடகிழக்கு மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர். எதிர்க்கட்சிகள் எழுப்பும் கேள்விகளுக்கு இவர்கள் விளக்கம் அளிக்க உள்ளனர்.

விவாதத்திற்கு பின் மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் மீதான வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. மக்களவையில் எம்.பி.க்கள் எண்ணிக்கை 570 ஆகும். தீர்மானத்தை நிறைவேற்ற பெரும்பான்மைக்கு 270 எம்.பி.க்களின் ஆதரவு தேவை. ஆனால், எதிர்க்கட்சிகளின் கூட்டணியில் 142 எம்.பி.க்கள் மட்டுமே உள்ளனர். மத்திய பாஜக அரசுக்கு தற்போது 332 எம்.பி.க்கள் ஆதரவு உள்ளது. நம்பிக்கை வாக்கெடுப்பின்போது ஒடிசாவின் பிஜூ ஜனதா தளம், ஆந்திராவின் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சிகள் பாஜகவுக்கு ஆதரவு அளிக்கும்பட்சத்தில் மத்திய பாஜக அரசின் பலம் 366 எம்.பி.க்கள் ஆதரவாக அதிகரிக்கும். இதன் மூலம் மத்திய பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வரும் நம்பிக்கையில்லா தீர்மானம் வாக்கெடுப்பின்போது தோல்வியடைய அதிக வாய்ப்புகள் உள்ளன. ஆனாலும், மணிப்பூர் விவகாரத்தில் பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் விளக்கம் அளிக்க வேண்டும் என்ற முக்கிய கோரிக்கையுடனேயே மத்திய அரசு மீது எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. மத்திய அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்துள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பங்கேற்கமாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது

Tags

Read MoreRead Less
Next Story