வெடிப்பொருட்கள் கடத்திய வழக்கில் கைதான 3 பேரை காவலில் எடுத்து போலீசார் தீவிர விசாரணை

வெடிப்பொருட்கள் கடத்திய வழக்கில் கைதான 3 பேரை காவலில் எடுத்து போலீசார் தீவிர விசாரணை
சேலம் அருகே உள்ள கருப்பூர் சோதனைச்சாவடி பகுதியில் கடந்த மாதம் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்துக்கு இடமளிக்கும் வகையில் வந்த மினிலாரியை நிறுத்தி போலீசார் சோதனை நடத்தினர். இதில் வைக்கோலுக்கு அடியில் 2½ டன் வெடிப்பொருட்களும், 950 ஜெலட்டின் குச்சிகளும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக லாரி டிரைவரான கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த இளையராஜா என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த கார்த்திக், தினேஷ் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர். போலீசார் நடத்திய விசாரணையில் வெடிப்பொருட்களை தர்மபுரியில் இருந்து கோவை வழியாக கேரளாவுக்கு கடத்த திட்டமிடப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்த நிலையில் கார்த்திக், தினேஷ், இளையராஜா ஆகியோரை காவலில் எடுத்து விசாரணை நடத்த கருப்பூர் போலீசார் சேலம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதையடுத்து கார்த்திக், தினேஷ் ஆகியோரை 6 நாட்கள் காவலிலும், இளையராஜாவை 3 நாட்கள் காவலிலும் வைத்து விசாரணை நடத்த கோர்ட்டு உத்தரவிட்டது. அதைத்தொடர்ந்து அவர்களிடம் போலீஸ் உதவி கமிஷனர்கள் செல்வம், நிலவழகன் மற்றும் இன்ஸ்பெக்டர் மனோன்மணி ஆகியோர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வெடிப்பொருட்கள் யாருக்கு கொண்டு செல்லப்பட்டது என்பது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணை முடிந்தால் தான் அதன் முழு விவரம் தெரியவரும் என்று போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
