பரமத்தி வேலூர் பகுதியில் குட்கா விற்பனை செய்த 3 கடைகளுக்கு சீல் - தலா ரூ.25 ஆயிரம் அபராதம்
கடைகளுக்கு சீல்
பரமத்தி வேலூர் பதியில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்த மூன்று கடைகளுக்கு சீல் வைத்து தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து உணவு பாதுகாப்புதுறையினர் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வேலூர் பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வதாக வேலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது. தகவலின் அடிப்படையில் வேலூர் காவல் ஆய்வாளர் ரங்கசாமி உத்தரவின் பேரில் வேலூர் கடை வீதி பகுதிகளில் போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வேலூர் கடைவீதியில் வேல்துரை என்பவரது மகன் ஜெயக்குமார் (41) தனது கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்தது தெரியவந்தது. அதனையடுத்து போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வழக்கு பதிவு செய்தனர். தடை செய்யப்பட்ட குட்கா பொருட்களை விற்பனை செய்ததற்காக ஜெயக்குமார் கடையை போலீசார் மற்றும் உணவு பாதுகாப்பு அலுவலர் முத்துசாமி ஆகியோர் சீல் வைத்து ரூ 25 ஆயிரம் அபராதம் விதித்தனர். இதேபோல் வெங்கமேடு மற்றும் கொந்தளம் பகுதியில் உள்ள இரு கடைகளிலும் குட்கா பொருட்கள் விற்பனை செய்வது கண்டுபிடிக்கப்பட்டு இரு மளிகை கடைகளுக்கும் உணவு பாதுகாப்புத்துறையினர் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்துள்ளனர். மேலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் விற்பனை செய்வது தெரியவந்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story