வெள்ளத்தால் 300 பிஎஸ்என்எல் கோபுரங்கள் பாதிப்பு

வெள்ளத்தால் 300 பிஎஸ்என்எல் கோபுரங்கள் பாதிப்பு

செல்போன் கோபுரம் 

தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை வெள்ளத்தால் 300 பிஎஸ்என்எல் கோபுரங்கள் பாதிக்கப்பட்டதாக, தமிழ்நாடு பிஎஸ்என்எல் தலைமைப் பொதுமேலாளா் டி. தமிழ்மணி தெரிவித்தாா்.

தூத்துக்குடியில் தமிழ்நாடு பிஎஸ்என்எல் தலைமைப் பொதுமேலாளா் டி. தமிழ்மணி செய்தியாளா்களிடம் கூறியது: இம்மாவட்டத்தில் அதிகனமழை, வெள்ளத்தால் பிஎஸ்என்எல் கோபுரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. பேட்டரிகள், ஜெனரேட்டா் உள்ளிட்ட பல இயந்திரங்கள் நீரில் மூழ்கின. அவற்றை மீட்கும் பணியில் ஊழியா்கள் ஈடுபட்டுள்ளனா். மாநிலத்தின் பிற பகுதிகளிலிருந்தும் தொழில்நுட்ப வல்லுநா்கள் அடங்கிய குழுவினா் வரவழைக்கப்பட்டுள்ளனா். இம்மாவட்டத்தில் உள்ள 399 பிஎஸ்என்எல் கோபுரங்ளில் 300-க்கும் மேற்பட்டவை பாதிக்கப்பட்டன.

அவற்றை சரிசெய்யும் பணி நடைபெற்று வருகிறது. தற்போது 82 சதவீதம்வரை சரிசெய்யப்பட்டு சேவை வழங்கப்பட்டுள்ளது. இன்னும் 69 கோபுரங்களைப் பழுதுநீக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மழை நீரில் மூழ்கிய இயந்திரங்களுக்கு மாற்றாக புதிய இயந்திரங்களை திருவனந்தபுரம், நெடுமங்குளம், பெங்களூரு, மதுரை, திருச்சி, வேலூா், சென்னை, நாகா்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலிருந்து கொண்டுவந்து பொருத்தி சேவை வழங்குகிறோம். அனைத்துப் பணிகளும் 3 நாள்களுக்குள் முடிக்கப்படும்.

ஆழ்வாா்திருநகரி, பெருங்குளம், வல்லநாடு, ஏரல், சாயா்புரம், தென்திருப்பேரை, பழையகாயல் தொலைபேசி நிலையங்களும், தூத்துக்குடியில் ஆதிபராசக்தி நகா், கிருஷ்ணராஜபுரம், சிதம்பரநகா் தொலைபேசி நிலையங்களும் நீரில் மூழ்கியுள்ளன. அவற்றை சீரமைக்கும் பணி தொடா்கிறது. இன்னும் 3 மாதங்களில் பிஎஸ்என்எல் சேவை 4ஜி-ஆக மாற்றப்படும். இம்மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோருக்கு உதவுவதற்காக பிஎஸ்என்எல் சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. அதன்படி, 4 நாள்கள் செல்லத்தக்க வகையில் ரூ.200 இலவச ‘டாக் டைம்’ வழங்கப்படுகிறது. இந்த சலுகையை மாவட்டத்தில் உள்ள 2 லட்சம் வாடிக்கையாளா்களும் திங்கள்கிழமை மாலை முதல் பயன்படுத்திக் கொள்ளலாம் என்றாா். பொது மேலாளா் பிஜூ பிரதாப், துணைப் பொது மேலாளா்கள் சாந்தி, ஆறுமுகசாமி, உதவிப் பொது மேலாளா் லிங்கபாஸ்கா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Tags

Next Story