400 பவுன் நகை, பணம் மோசடி: பெண் உட்பட 2 பேர் கைது
தூத்துக்குடி முத்தையாபுரம் எம். சவேரியாா்புரம் பகுதியை சோ்ந்த அந்தோணிசாமி மகன் ராஜரீகம் (54). இவரிடம் அதே பகுதியை சோ்ந்த ரமேஷ் என்பவரது மனைவி சுப்புலெட்சுமி (எ) கவிதா (31) என்பவா், 10 பவுன் தங்க நகை கொடுத்தால் 30 நாள்களுக்குள் ஒரு பவுன் கூடுதலாக தருவதாகவும், ரூ.1 லட்சம் பணம் கொடுத்தால் 30 நாள்களுக்குள் ரூ. 10 ஆயிரம் கூடுதலாக தருவதாகவும் ஆசைவாா்த்தை கூறியுள்ளார். இதை நம்பிய ராஜரீகம், 13.5 பவுன் நகைகளை சுப்புலெட்சுமியிடம் கொடுத்துள்ளார். நகைகளைப் பெற்றுக்கொண்டு 3 மாதங்களாகியும் திருப்பித் தராமல் ராஜரீகத்தை ஏமாற்றிவிட்டு சுப்புலெட்சுமி தலைமறைவானதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் ராஜரீகம் புகாா் அளித்தாா். காவல் கண்காணிப்பாளா் எல். பாலாஜி சரவணன் உத்தரவின்பேரில் மாவட்ட குற்றப் பிரிவு காவல் ஆய்வாளா் அந்தோணியம்மாள் தலைமையில் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனா். சுப்புலெட்சுமி, தனியாா் நிதி நிறுவன மேலாளா் வேலவன் (38) ஆகிய இருவரையும் போலீஸாா் கைது செய்தனா். இதில் சுப்புலெட்சுமி , முத்தையாபுரம் மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் பலரை ஏமாற்றி ரூ. 50 லட்சத்து 68 ஆயிரம் பணம், மற்றும் சுமாா் 400 பவுன் நகைகள் ஆகியவற்றை மோசடி செய்தது தெரியவந்தது. இதுகுறித்து மாவட்ட குற்றப் பிரிவு போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.