வேனில் கொண்டுசென்ற 405 சேலைகள் பறிமுதல்
பறிமுதல் செய்யப்பட்ட சேலைகள்
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வருகிற ஏப்ரல் மாதம் 19-ந் தேதி நடக்கிறது. ேதர்தல் நடத்தை விதிமுறைகளும் உடனடியாக அமலுக்கு வந்ததால் பறக்கும் படையினர் பல்வேறு பகுதிகளில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள். நேற்று திருச்செந்தூர்-ஆலந்தலை சாலையில் தோப்பூர் விலக்கு அருகே ஆழ்வார்திருநகரி யூனியன் உதவி பொறியாளர் பிரேம்சந்தர் தலைமையில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக வந்த வேனை சந்தேகத்தின் பேரில் நிறுத்தி சோதனையிட்டனர். அதில் 405 சேலைகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. வேனில் இருந்த தூத்துக்குடியைச் சேர்ந்த ஆனந்தகுமார் என்பவரிடம் விசாரணை நடத்திய போது, ஆவணங்கள் எதுவும் இன்றி சேலைகளை கொண்டு சென்றது தெரியவந்தது. அவரிடம் உரிய ஆவணங்களை காண்பித்து சேலைகளை பெற்றுச் செல்லலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து பறக்கும் படை அதிகாரிகள் சேலைகளை பறிமுதல் செய்து, திருச்செந்தூர் தாசில்தாரிடம் ஒப்படைத்தனர்.