தோல்வி பயத்தினால் சண்முகம் என்ற பெயரில் 9பேரை நிறுத்தி உள்ளனர்:ஏ.சி.எஸ்

தோல்வி பயத்தினால் சண்முகம் என்ற பெயரில் 9பேரை நிறுத்தி உள்ளனர்:ஏ.சி.எஸ்

கூட்டத்தில் பேசும் ஏ.சி சண்முகம் 

பாமக வந்தவுடன் தேசிய ஜனநாயக கூட்டணி முதல் கூட்டணியாக உள்ளது என ஏ சி சண்முகம் தெரிவித்துள்ளார்.

வேலூர் நாடாளுமன்ற தொகுதி பா.ஜனதா வேட்பாளர் ஏ.சி.சண்முகம் நேற்று கே.வி.குப்பத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.அப்போது பேசிய அவர்,"பா.ஜனதா கூட்டணி மூன்றாவது கூட்டணி என்றார்கள்.

பா.ம.க. வந்தவுடன் முதல் கூட்டணியாக மாறியது. பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பிரதமராக போகிறார். தமிழகத்தில் ஒரு சொட்டு சாராயம் இருக்காது என்றார்கள். சாராயம் ஒழிக்கப்பட்டதா?. டாஸ்மாக்கை மூடினார்களா?. மாறாக 3,000 கடைகள் அதிகமானது.வெளிநாட்டில் இருக்கக்கூடிய போதைப் பொருள் தமிழகத்திற்கு வந்துள்ளது.

தமிழகத்தில் போதைப்பொருள் புழக்கம் அதிகமாகி உள்ளது. அதன் தலைவனாக ஜாபர் சாதிக் உள்ளார். தி.மு.க. வேட்பாளர் கதிர்ஆனந்த் மகளிர் உரிமைத் தொகை பெறுவோரை கொச்சைப் படுத்துகிறார்.ஒவ்வொரு ஆண்டும் 600 பேருக்கு எனது கல்லூரியில் இலவச சீட்டு கொடுப்பேன். என்னை எதிர்த்து போட்டியிடுபவர் கூட பள்ளி, கல்லூரிகளை நடத்தி வருகிறார்.

100 சீட்டு வேண்டாம், பத்து சீட்டு இலவசமாக கொடுக்க சொல்லுங்கள் பார்ப்போம். என்னுடைய பெயர் கொண்ட (சண்முகம்) 9 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தது எதேச்சையாக நடந்ததாக தெரியவில்லை. நான் முன்னணியில் இருக்கிறேன் என்ற காரணத்தால், தோல்வி பயத்தால் இவ்வளவு பேரை உருவாக்கி இருக்கிறார்கள். என்னை தோற்கடிக்கவும், ஓட்டை பிரிக்கவும் இதை செய்துள்ளார்கள்.

அவர்கள் என்ன எதிர்பார்க்கிறார்களோ அது நடக்காது. தாமரை தான் முதலிடத்தில் இருக்கும். எத்தனை சண்முகத்தை நிறுத்தினாலும் இந்த ஏ.சி.சண்முகம் தான் இறுதியாக, 1½ லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார். 100 நாள் வேலை திட்டத்தின் ஊதியத்தை உயர்த்தியதற்கு பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

எந்த காரணத்தை முன்னிட்டும் 100 நாள் வேலை திட்டத்தை மத்திய அரசு கைவிடாது. இன்னும் அதிகமாக நிதி கொடுப்பார்கள். இன்னும் அதிகமாக கூலியை உயர்த்துவார்கள் என கூறினார்.

Tags

Next Story