அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நிபுணர்கள் குழு அமைப்பு!!
அண்ணா பல்கலைக்கழகம்
சென்னை அண்ணா பல்கலைக் கழகத்தில் படித்துவரும் என்ஜீனியரிங் மாணவிக்கு நிகழ்ந்த பாலியல் கொடுமை தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. காதலனான மாணவருடன் மாணவி அமர்ந்து பேசிக் கொண்டிருந்தபோது அங்கு வந்த வாலிபர் இருவரும் நெருக்கமாக இருப்பதை வீடியோ எடுத்து மிரட்டியதுடன், காதலனை அங்கிருந்து விரட்டி விட்டு மாணவியை தனியாக அழைத்துச் சென்று பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டான். இது தொடர்பாக மாணவி அளித்த புகாரின் பேரில் கோட்டூர்புரம் மகளிர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். பெற்றோர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள இந்த சம்பவம் தொடர்பாக சென்னை கோட்டூரை சேர்ந்த ஞானசேகரன் (37) என்ற வாலிபர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த நிலையில் வாலிபர் ஞானசேகரனால் மாணவி கடுமையான பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டிருப்பதாக பரபரப்பான புதிய தகவல்கள் கிடைத்துள்ளன. இது தொடர்பாக போலீசார் பதிவு செய்துள்ள முதல் தகவல் அறிக்கை (எப்.ஐ.ஆர்.) யில் அதிர வைக்கும் வகையில் திடுக்கிடும் தகவல்கள் இடம் பெற்றுள்ளன. இதற்கிடையே, அண்ணா பல்கலைக்கழக மாணவர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பை பலப்படுத்த நிபுணர்கள் குழு அமைக்கப்பட்டுள்ளது. அதன்படி, கிண்டி பொறியியல் கல்லூரி முதல்வர் ஈஸ்வரகுமார் தலைமையில் 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவர்களுக்கான பாதுகாப்பு குறித்த புதிய வழிகாட்டி நெறிமுறைகள் குறித்த அரசாணை வெளியிடவும் திட்டமிடப்பட்டுள்ளது.