வியாபாரி காரை ஏற்றி படுகொலை: மருந்து கடை ஊழியர் வெறிச்செயல்

வியாபாரி காரை ஏற்றி படுகொலை: மருந்து கடை ஊழியர் வெறிச்செயல்

கொலை

சாத்தான்குளம் அருகே பானிபூரி வியாபாரியை காரை ஏற்றி படுகொலை செய்த மருந்து கடை ஊழியர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள புத்தன்தருவை பகுதியைச் ேசர்ந்தவர் மீரான் (வயது 47). இவர் வீட்டில் பானிபூரி தயாரித்து மோட்டார் சைக்கிளில் ஊர் ஊராக சென்று விற்பனை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவில் வியாபாரத்தை முடித்துக் கொண்டு மீரான் தனது வீட்டின் முன் நின்று கொண்டு இருந்தார். அப்போது, அவர் பின்னால் வந்த கார் திடீரென்று மீரான் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இதில் சம்பவ இடத்திலேயே மீரான் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார். அவரது உடலை பார்த்து குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபமாக இருந்தது. இதுகுறித்து உடனடியாக தட்டார்மடம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சாத்தான்குளம் டிஎஸ்பி கென்னடி, தட்டார்மடம் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) ஏசு ராஜசேகரன், சப்-இன்ஸ்பெக்டர் குரு மைக்கேல் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மீரான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில் மீரான் காரை ஏற்றி படுகொலை செய்யப்பட்டார் என்ற திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது, புத்தன்தருவை பகுதியைச் சேர்ந்தவர் மைதீன். இவர் அங்கு மருந்துக்கடை (மெடிக்கல்) நடத்தி வருகிறார். இவரது கடையில் அதே பகுதியைச் சேர்ந்த இம்ரான் (25) என்பவர் ஊழியராக வேலை செய்து வந்தார். இந்த மருந்துக்கடையில் மருந்து, மாத்திரைகள் வாங்கிய வகையில் மீரான் ரூ.1,000 கொடுக்க வேண்டி இருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து மீரான் வைத்துள்ள பாக்கி பணத்தை வாங்கித்தரும்படி மைதீன், இம்ரானிடம் கூறியதாக கூறப்படுகிறது. இதனால் இம்ரான், மீரான் வீட்டிற்கு அடிக்கடி சென்று ரூ.1,000 தரும்படி கேட்டு வந்தார். மேலும் மீரான் வீட்டில் இல்லாத நேரத்தில் அவரது மனைவியிடம் இம்ரான் பணத்தை கேட்டுள்ளார். இது மீரானுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதுகுறித்து இம்ரானிடம் மீரான் தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இதனால் ஆத்திரம் அடைந்த இம்ரான் நேற்று முன்தினம் வீட்டின் முன் நின்று கொண்டு இருந்த மீரானை காரை ஏற்றிக் கொலை செய்தது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து புத்தன்தருவையில் பதுங்கியிருந்த இம்ரானை கைது செய்தனர். அவரிடமிருந்து கொலைக்கு பயன்படுத்தப்பட்ட கார் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் தலைமறைவான மைதீனை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு உள்ளது. தனிப்படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். இந்த கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags

Read MoreRead Less
Next Story