வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தை‌; மயக்க ஊசி செலுத்தி மீட்பு!

நீலகிரி மாவட்டம் கூடலூர் ஸ்ரீ மதுரை ஊராட்சிக்கு உட்பட்ட சேமுண்டி கிராமத்தில் வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தையை, மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் மீட்டனர்.

நீலகிரி மாவட்டம் கூடலூர், முதுமலை புலிகள் காப்பகத்தை ஒட்டி ஸ்ரீமதுரை ஊராட்சி அமைந்துள்ளது. வனப்பகுதியை ஒட்டி அமைந்துள்ளதால் ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட கிராமங்களுக்குள் வன விலங்குகள் அவ்வப்போது வழி தவறி நுழைகின்றன. இந்நிலையில் நேற்று மதியம் ஸ்ரீமதுரை ஊராட்சிக்கு உட்பட்ட சேமுண்டி கிராம பகுதியைச் சேர்ந்த பாப்பச்சன் என்பவருக்கு சொந்தமான தேயிலை தோட்டத்தில் உள்ள ஆட்கள் இல்லாத வீட்டிற்குள் சிறுத்தை ஒன்று நுழைந்தது.

மதிய உணவுக்காக அந்த வீட்டிற்குள் சிறுத்தை இருப்பது தெரியாமல் தேயிலை தோட்ட தொழிலாளி ஒருவர் , உடைமைகள் மற்றும் வேளாண் உபகரணரங்களை எடுக்கச் சென்றுள்ளார். அப்போது வீட்டில் பதுங்கி இருந்த சிறுத்தை அவரை ஆக்ரோசத்துடன் தாக்க முயன்றுள்ளது. சிறுத்தையிடமிருந்து தப்பித்து, வீட்டை விட்டு வெளியேறிய தொழிலாளி, சிறுத்தை வீட்டிற்குள் இருந்து வெளியேறாமல் இருக்க வீட்டின் கதவை வெளியே பூட்டியுள்ளார். அப்பகுதி மக்கள் உதவியுடன் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சுமார் ஏழு மணி நேரத்திற்கு மேலாக சிறுத்தையை மீட்பது குறித்து வனத்துறை உயர் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வந்தனர். மேலும் குடியிருப்பு பகுதிக்குள் நுழைந்துள்ள சிறுத்தையை மயக்க ஊசி செலுத்தி பிடிக்க முதுமலை புலிகள் காப்பகத்தில் இருந்து கால்நடை மருத்துவர் ராஜேஷ் தலைமையிலான கால்நடை மருத்துவ குழு வரவழைக்கப்பட்டது. வீட்டிற்குள் சுமார் 7 மணி நேரத்திற்கு மேலாக சிக்கிய சிறுத்தைக்கு, முதுமலை புலிகள் காப்பக வனக் கால்நடை மருத்துவர் ராஜேஷ் மயக்க ஊசி செலுத்தினார்.அதை தொடர்ந்து கால்நடை மருத்துவக் குழு மூலம் சிறுத்தை மயக்கம் அடைந்ததை உறுதி செய்த பின் வனத்துறையினர் பாதுகாப்பு உபகரணங்கள் பொருத்திய உடை அணிந்து சிறுத்தையை மீட்டு. முதுமலை புலிகள் காப்பகத்தில் உள்ள அடர்ந்த வனப்பகுதிக்குள் விட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இச்சம்பவம் குறித்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கூறுகையில், " தவறுதலாக வீட்டிற்குள் நுழைந்த சிறுத்தைக்கு மயக்க ஊசி செலுத்தி மீட்க வேண்டிய அவசியம் இல்லை. மாலை வரை காத்திருந்து நள்ளிரவில் சிறுத்தையை‌ வீட்டில் இருந்து திறந்து விட்டிருக்கலாம். அப்படி செய்திருந்தால் அந்த சிறுத்தை அதன் வாழிடத்திற்கு மீண்டும் சென்றிருக்கும். சிறுத்தையின் உடல் நிலை, எடை உள்ளிட்ட தகவல்கள் சரிவர தெரியாமல் மயக்க ஊசி செலுத்த யார் அழுத்தம் கொடுத்து என்பது தான் கேள்வியாக இருக்கிறது," என்றனர்.

Tags

Next Story