அரியலூர்: 2வது திருமணம்: 10 ஆண்டுகள் சிறை
2வது திருமணம்
அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மணிகண்டன் வெளிநாடுகளுக்கு கூலி ஆள்களை அனுப்பும் பணியை மேற்கொண்டு வருகிறார். இவர், கடந்த 2013 ஆம் ஆண்டு சாந்திப்பிரியா(30) என்பவரை திருமணம் செய்து கொண்டு, அவரிடம், அடிக்கடி நகை, பணம் கேட்டு கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
இதனிடையே, மணிகண்டன் முதல் திருமணத்தை மறைத்து கடந்த 2018 ஆம் ஆண்டு திருச்சியை சேர்ந்த வித்யா என்பரை திருமணம் செய்து கொண்டு, அவருக்கு தெரியாமல் வீட்டிலுள்ள நகைகளை எடுத்து அடமானம் வைத்துள்ளார். மேலும் வித்யாவின் சகோதரரை வெளிநாட்டுக்கு அனுப்புவதாகக் கூறி பணத்தை பெற்றுக்கொண்டும் வித்யா குடும்பத்தினரை ஏமாற்றியுள்ளார். இதுகுறித்து வித்யா குடும்பத்தினர், மணிகண்டனிடம் கேட்டபோது, தகராறில் ஈடுபட்டதுடன், அங்கிருந்து சொந்த ஊரான தூத்தூருக்கு வந்துவிட்டார்.
இதையடுத்து வித்யா குடும்பத்தினர் மணிகண்டன் குறித்து விசாரித்ததில், அவருக்கு ஏற்கனவே திருமணம் ஆனது தெரியவந்தது. இதுகுறித்து வித்யா திருச்சி கண்டோன்மென்ட் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதுதொடர்பான வழக்கு விசாரணை அரியலூர் மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்து வந்த நீதிபதி செல்வம், குற்றவாளி மணிகண்டனுக்கு 10ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நேற்று தீர்ப்பளித்தார். இதையடுத்து மணிகண்டன் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.