தஞ்சை அருகே வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த நபர் கைது

தஞ்சை அருகே வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்த நபர் கைது
கோப்பு படம் 
தஞ்சை அருகே ஆன்லைன் மூலம் வேலை வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய நபர் கைது செய்யப்பட்டார்.

தஞ்சாவூர் மாவட்டம், வேலை வாங்கித் தருவதாக விளம்பரம் செய்து, பட்டுக்கோட்டையைச் சேர்ந்தவரிடம் ரூ. 57 ஆயிரத்தை வாங்கி ஏமாற்றிய நபரை காவல் துறையினர் வியாழக்கிழமை கைது செய்தனர்.

பட்டுக்கோட்டை அருகே மன்னங்காட்டைச் சேர்ந்தவர் என். சுரேஷ்குமார் (39). இவர் பட்டுக்கோட்டை பேருந்து நிலையத்தில் ஒட்டப்பட்டிருந்த சுவரொட்டி விளம்பரத்தில் மொரீசியஸ் நாட்டில் வேலைவாய்ப்பு எனக் குறிப்பிடப்பட்டிருந்தைப் பார்த்தார். அதில் குறிப்பிடப்பட்டிருந்த எண்ணுக்கு சுரேஷ்குமார் தொடர்பு கொண்டபோது, எதிர் முனையில் பேசிய நபர் ரூ. 57 ஆயிரம் செலுத்த வேண்டும் எனக் கூறினார்.

இதை நம்பிய சுரேஷ்குமார் ரூ. 57 ஆயிரத்தை இணையவழி மூலம் தொடர்புடைய நபருக்கு அனுப்பினார். ஆனால், சுரேஷ்குமாருக்கு போலியான பணி நியமன ஆணைக் கடிதம், போலி விசா, பயணச்சீட்டு வந்தது.

இது தொடர்பாக ஏமாற்றிய நபரை சுரேஷ்குமார் தொடர்பு கொண்டபோது, அழைப்பைத் துண்டித்துவிட்டார். இது குறித்து தஞ்சாவூர் சைபர் காவல் நிலையத்தில் சுரேஷ்குமார் புகார் செய்தார். இதன் பேரில் காவல் துறையினர் வழக்குப் பதிந்து மயிலாடுதுறை மாவட்டம், தில்லைமங்கலத்தைச் சேர்ந்த ஆனந்தராஜை (38) வியாழக்கிழமை கைது செய்தனர். இவர் பல்வேறு நபர்களிடம் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ஏமாற்றியது விசாரணையில் தெரிய வந்தது.

இது போன்று வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறும் போலியான நிறுவனங்களின் விளம்பரங்களைக் கண்டு பொதுமக்கள் யாரும் ஏமாற வேண்டாம் என தஞ்சாவூர் மாவட்ட சைபர் காவல் நிலையம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Tags

Next Story