ஊட்டியில் ஆ.ராசா பிரச்சாரம்
பத்தாண்டு பா.ஜ.க., ஆட்சியில், நாடாளுமன்றத்திற்கு வராமல் பொய்களை மட்டுமே பிரதமர் பேசுகிறார் என இறுதிக்கட்ட பிரசாரத்தில் ஆ. ராசா குற்றம் சாட்டினார்.
தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. இதற்காக இறுதி கட்ட பிரசாரத்தில் அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டனர். இந்தியா கூட்டணியின் நீலகிரி நாடாளுமன்ற வேட்பாளர் ஆ.ராசா ஊட்டி மெயின் பஜார் பகுதியில் இறுதிக்கட்ட பிரசாரத்தை மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது: தமிழ்நாட்டு மக்களுக்கு தமிழ்நாட்டின் முதலமைச்சர் எண்ணற்ற திட்டங்களை செய்து வரும் நிலையில் தி.மு.க., ஆட்சியின் சாதனைகளை கூறி வாக்கு கேட்காமல் இந்தியாவைக் காக்க உங்கள் ஸ்டாலின் அழைக்கிறேன் என்ற தலைப்பில் நாட்டு மக்களை முதலமைச்சர் அழைக்கிறார். இந்தியாவை பா.ஜ.க., விடமிருந்து மீட்டெடுக்க நாட்டு மக்கள் ஒன்றுபட வேண்டும். பத்தாண்டு பா.ஜ.க., ஆட்சியில் குரங்கு கையில் பூமாலை கிடைத்தது போல் மோடி ஆட்சி நடத்தினர். 10 ஆண்டுகளில் பா.ஜ.க., சார்பில் வழங்கிய வாக்குறுதிகளில் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. ஆண்டுக்கு இரண்டு கோடி பேருக்கு வேலை வாய்ப்பு என அறிவித்த மோடி, விவசாயிகளின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவேன், இந்தியாவில் உள்ள அனைத்து நதிகளையும் ஒன்றிணைப்பேன் இதனால் நாட்டில் பஞ்சம் இருக்காது இந்தியா சொர்க்க பூமியாக திகழும் என்றார். ஆனால் 10 ஆண்டுகளில் ஏமாற்றம் மட்டுமே நாட்டு மக்களுக்கு மிஞ்சியது. 10 ஆண்டுகளில் பொய்களை மட்டுமே பேசிய ஒரே பிரதமர் நரேந்திர மோடி. இந்தநிலை மாற வேண்டும் என்றால் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் எனக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெறச் செய்யுங்கள். இவ்வாறு அவர் பேசினார்.
Next Story