காரை துரத்திய காட்டு யானை
காட்டு யானை துரத்தல்
ஈரோடு மாவட்டம், திம்பம் வழியாக கர்நாடக மாநிலம் கொள்ளேகாலத்திற்கு கேர்மாளம் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையையொட்டி அடர்ந்த வனப்பகுதிகள் உள்ளதால், காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் அந்த சாலையில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு இருக்கிறது.
இந்த நிலையில் நேற்று கேர்மாளம் ரோட்டில் கார் உள்ளிட்ட வாகனங்கள் சென்று கொண்டிருந்தன. அப்போது காட்டு யானை ஒன்று சாலை ஓரத்தில் நின்று அங்கிருந்த செடி, கொடிகளை தின்று கொண்டிருந்தது.
இதனால் வாகனங்களில் வந்தவர்கள் வாகனங்களை நிறுத்தி, யானையை பார்த்து ரசித்து கொண்டு எப்போது காட்டுக்குள் செல்லும் என காத்திருந்தனர். அப்போது யானை வாகனங்களை வழிமறித்ததால், வாகன ஓட்டிகள் மற்றும் பயணம் செய்தவர்கள் அச்சமடைந்தனர். அப்போது வெள்ளை நிற கார் யானை சாலையோரம் நின்ற போது, வேகமாக சென்று விடலாம் என்று வாகன ஓட்டி காரை இயக்கினார். அப்போது ஆக்ரோஷம் அடைந்த காட்டு யானை பிளிறியவாறு காரை நோக்கி வேகமாக ஓடி சென்று துரத்தியது.
இதனால் அதிர்ச்சியடைந்த வாகன ஒட்டி காரை வேகமாக இயக்கி தப்பித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. காட்டு யானைகள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் வாகன ஓட்டிகள் கவனமாக செல்லுமாறு வனத்துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.