குடிசைமாற்று வாரிய வீட்டுக்கு கூடுதல் தொகை.: - ஈஸ்வரன் எம்எல்ஏ வலியுறுத்தல்

குடிசைமாற்று வாரிய வீட்டுக்கு கூடுதல் தொகை.: - ஈஸ்வரன் எம்எல்ஏ வலியுறுத்தல்

ஈஸ்வரன் எம்எல்ஏ


குடிசைமாற்று வாரிய வீட்டுக்கு கூடுதல் தொகை ஒதுக்க ஈஸ்வரன் எம்எல்ஏ வலியுறுத்தியுள்ளார்.

குடிசை மாற்று வாரிய வீடு ஒதுக்கீட்டுதாரர்களிடம், கூடுதல் தொகை கேட்காமல் வீடுகளை ஒப்படைக்க வேண்டும் என கொங்கு ஈஸ்வரன் எம்.எல்.ஏ வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து கொ.ம.தே.க பொது செயலாளரும், திருச்செங்கோடு எம்.எல்.ஏ வுமான ஈ.ஆர்.ஈஸ்வரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு முழுவதும் பல இடங்களில் நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் (குடிசை மாற்று வாரியம்) சார்பாக அடுக்குமாடி கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளன.

அந்த வீடுகள் ஒதுக்கீடு செய்யும் போது பயனாளிகள் கட்ட வேண்டிய தொகை நிர்ணயிக்கப்பட்டு வசூலிக்கப்பட்டது. அந்த தொகையை கட்டுவதற்கே ஏழை மக்களாகிய பயனாளிகள், கடன் வாங்கித் தான் செலுத்தியிருக்கிறார்கள். வீடுகள் கட்டி முடித்ததற்கு மிகவும் தாமதமானதன் காரணத்தினால், வாங்கிய கடனுக்கு வட்டி செலுத்துவதோடு மட்டுமல்லாமல், ஏற்கனவே வாடகைக்கு குடியிருக்கும் வீடுகளுக்கும் தொடர்ந்து வாடகை கொடுத்து சிரமப்பட்டு வருகின்றனர்.

பல இடங்களில் வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஒப்படைப்பு செய்யப்படுகின்ற நிலையில், மேலும், கூடுதல் தொகை கட்ட வேண்டுமென்று துறை சார்பாக பயனாளிகளுக்கு கடிதம் அனுப்பப்பட்டு வருகிறது. கூடுதல் கட்டணத்தை கட்டும் நிலையில் பயனாளிகள் இல்லை. கூடுதல் தொகையை வசூலிக்கவும் முடியாமல், கட்டி முடிக்கப்பட்ட வீடுகளை ஒப்படைப்பு செய்யவும் வழியில்லாமல் துறையின் அதிகாரிகள் சிரமப்படுகிறார்கள். மாவட்ட ஆட்சியர்களும் உண்மை நிலையை அரசுக்கு தெரிவித்த பிறகும், கூடுதல் கட்டணத்தை பயனாளிகள் கட்டித் தான் ஆக வேண்டுமென்று கட்டாய நிலை இருக்கிறது.

வீடுகளுக்கான பயனாளிகளை நிர்ணயம் செய்து, கட்டணம் இவ்வளவு என்று முடிவு செய்து, வசூலித்த பின், மீண்டும் வீட்டை ஒப்படைக்கும் போது கூடுதலாக கேட்பது தவிர்க்கப்பட வேண்டும். புதிதாக இனிமேல் வாங்குபவருக்கு புதிய கட்டணம் நிர்ணயிப்பதை பற்றி பரிசீலிக்கலாம். ஏழைப் பயனாளிகளின் இயலாமையை கருத்தில் கொண்டு கூடுதல் கட்டணம் கேட்பதை நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் கைவிட்டு பயனாளிகளுக்கு உரிய வீடுகளை உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என கேட்டு கொண்டுள்ளார்.

Tags

Next Story