அதிமுக சார்பில் 40 தொகுதிகளுக்கும் தேர்தல் பணிக்குழு பொறுப்பாளர்கள் நியமனம்
அதிமுக சார்பில் 40 தொகுதிகளுக்கும் தேர்தல் பணி குழு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.
அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலுக்காக தொகுதி வாரியாக தேர்தல் பணிக் குழு பொறுப்பாளர்களை நியமித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. அதன்படி, அதிமுக தலைமை அலுவலகத்தில் இருந்து தேர்தல் பணிகளை முறைப்படுத்தும் பொறுப்பாளராக முன்னாள் அமைச்சர் பொன்னையன் நியமிக்கப்பட்டுள்ளார். திருவள்ளூர் தொகுதிக்கு முன்னாள் எம்.பி வேணுகோபால், முன்னாள் அமைச்சர்கள் மாதவரம் மூர்த்தி, பி.வி.ரமணா உள்ளிட்டோர் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். சென்னை வடக்கு தொகுதிக்கு ஜெயக்குமாரும், தென் சென்னைக்கு கோகுல இந்திராவும், மத்திய சென்னைக்கு தமிழ் மகன் உசேனும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். ஸ்ரீபெரும்புதூர் தொகுதிக்கு பெஞ்சமின், காஞ்சிபுரம் தொகுதிக்கு ப.வளர்மதி, அரக்கோணம் தொகுதிக்கு கே.சி.வீரமணி, வேலூர் தொகுதிக்கு தம்பிதுரை, கிருஷ்ணகிரி தொகுதிக்கு கே.பி.முனுசாமி, தருமபுரி தொகுதிக்கு கே.பி.அன்பழகன் ஆகிய முன்னாள் அமைச்சர்கள் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். நீலகிரி மற்றும் பொள்ளாச்சி தொகுதிகள் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். திண்டுக்கல் தொகுதிக்கு திண்டுக்கல் சீனிவாசனும், கரூர் தொகுதிக்கு சின்னசாமியும், திருச்சி தொகுதிக்கு சி.விஜயபாஸ்கரும், சிதம்பரம் தொகுதிக்கு முன்னாள் அமைச்சர் செம்மலையும் பொறுப்பாளர்களாக உள்ளனர்.
Next Story