மக்களுக்கும், அரசு ஊழியர்களுக்கும் பட்டை நாமம் - எடப்பாடி பழனிசாமி

தமிழக மக்களுக்கு மட்டும் அல்ல, அரசு ஊழியர்களுக்கும் பட்டை நாமத்தை முதல்வர் ஸ்டாலின் போட்டுவிட்டார் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திருப்பத்தூரில் நடைபெற்ற பரப்புரையின் போது தெரிவித்தார்.

திருவண்ணாமலை மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணி கட்சி சார்பில் போட்டியிடும் கலிபெருமாளை ஆதரித்து அதிமுக பொதுச்செயலாளரும், தமிழக எதிர்க்கட்சித்தலைவருமான எடப்பாடி பழனிசாமி திருப்பத்தூர் அடுத்த வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் தேர்தல் பிரச்சாரம் செய்தார்.

அப்போது பேசிய அவர்: திருப்பத்தூர் மக்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 2019-ம் ஆண்டு வேலூர் மாவட்டத்துடன் இருந்த திருப்பத்தூர் புதிய மாவட்டமாக அதிமுக ஆட்சியில் பிரிக்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நல்ல பல திட்டங்களை திமுக அரசு ரத்து செய்துள்ளது. திமுக ஆட்சிக்கு வந்ததே அதிமுக கொண்டு வந்த திட்டங்களை ரத்து செய்யத்தான். ஏழை பெண்கள்வாழ்க்கை மேம்பட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தாலிக்கு தங்கம் என்ற அற்புதமான திட்டத்தை கொண்டு வந்தார். அதேபோல, திருமண உதவித்திட்டத்தை கொண்டு வந்தார்.

இந்த திட்டம் தற்போது திமுக அரசு ரத்து செய்துள்ளது. இதனால், பல ஏழை பெண்களின் திருமணம் தடைப்பட்டுள்ளது. இன்று ஒரு பவுன் தங்கம் ரூ.50 ஆயிரத்தை கடந்துவிட்டது. இது போன்ற சூழ்நிலையில் தாலிக்கு தங்கம் என்ற திட்டம் ரத்து செய்யாமல் இருந்து இருந்தால் பெண்கள் மகிழ்ச்சியடைந்து இருப்பார்கள். ஆகவே, பெண்களை ஏமாற்றிய திமுக அரசுக்கு இந்த தேர்தல் மூலம் தோல்வி என்ற தண்டனையை ஏழை பெண்கள் வழங்க வேண்டும். அதிமுக ஆட்சியில் ஏழை எளிய மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்கவும், அவர்கள் விஞ்ஞான கல்வி பெற மடிக்கணினி வழங்கும் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

ரூ.7,300 கோடி மதிப்பில் 52 லட்சத்து 30 ஆயிரம் மாணவர்களுக்கு இலவசமாக மடிக்கணினி வழங்கினோம். அதேபோல, பெண்களுக்கு மானிய விலையில் இருசக்கர வாகனம் வழங்கினோம். இந்த திட்டங்களை விடியா திமுக அரசு ரத்து செய்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட போது ரூ.120 கோடியில் ஆட்சியர் அலுவலகம், ரூ.60 கோடியில் எஸ்பி அலுவலகம் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது. அதை ஸ்டாலின் வந்து திறந்து வைத்து பெருமை பேசுகிறார். அதேபோல, தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களுக்கு திமுக உரிமை கொண்டாடுகிறது. அதிமுக ஆட்சி இருண்ட ஆட்சி எனக்கூறும் ஸ்டாலின் கண்ணை திறந்து பார்த்தால் தெரியும் அதிமுக ஆட்சிக்காலம் வெளிச்சமான ஆட்சிக்காலம் என்பது.

திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் காவிரி கூட்டு குடிநீர் திட்டத்தை அதிமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டது. ஜோலார்பேட்டை சட்டப்பேரவை தொகுதி முழுவதும் ரூ.160 கோடி மதிப்பில் காவிரி கூட்டு குடிநீர் திட்டம் வீட்டுக்கு, வீடு வழங்கப்பட்டுள்ளது. அதேபோல, வாணியம்பாடி முதல் ஊத்தங்கரை வரை ரூ.299 கோடி மதிப்பில் நான்கு வழிச்சாலை அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனால், விபத்தில்லா பயணத்தை மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். திருப்பத்தூர் அரசு மருத்துவமனை அதிமுக ஆட்சியில் தரம் உயர்த்தப்பட்டது. கந்திலி பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அதிமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. நாட்றாம்பள்ளி தாலுகாவுக்காக உயர்த்தப்பட்டது அதிமுக ஆட்சியில். விவசாய பெண் தொழிலாளர்கள் வாழ்வில் வளம்பெற விலையில்லா கறவை மாடுகள், ஆடுகள், கோழி ஆகியவை அதிமுக ஆட்சியில் வழங்கப்பட்டது. இப்படி நல்ல பல திட்டங்களை திமுக அரசு இந்த 3 ஆண்டுகளில் ஏதாவது ஒன்றை செய்துள்ளதா என்பதை மக்கள் எண்ணிபார்க்க வேண்டும்.

2021-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலின் போது பொய்யான வாக்குறுதிகளை அளித்த ஸ்டாலின் அதில் 98 சதவீதம் வாக்குறுதிகளை நிறைவேற்றிவிட்டதாக பொய் பிரச்சாரம் செய்து வருகிறார். 100 நாள் வேலையை 150 நாள் வேலையாக உயர்த்துவதாக கூறினார். காஸ் சிலிண்டருக்கு ரூ.100 மானியம் வழங்குவதாக கூறினார். இதையெல்லாம் செய்தாரா ? பட்டை நாமத்தை தான் போட்டார். மக்களுக்கு மட்டுமோ அரசு ஊழியர்களுக்கு பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதாக கூறி அவர்களுக்கும் பட்டை நாமத்தை போட்டவர் தான் இந்த ஸ்டாலின். அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் 5 லட்சம் முதியவர்கள் ஓய்வூதியம் வழங்கவேண்டும் என மனு அளித்தனர். அதில் 4.80 லட்சம் முதியவர்களுக்கு அதிமுக ஆட்சியில் ஓய்வூதியம் வழங்கப்பட்டது. இப்போதும் திமுக அரசு தகுதி வாய்ந்த நிறைய பேருக்கு முதியோர் ஓய்வூதியத்தை நிறுத்தியுள்ளது. மக்களின் உரிமைகளை பறித்து மக்களை ஏமாற்றிவருகிறார் ஸ்டாலின்.

அதிமுக ஆட்சியில் நீட் தேர்வு எழுத பயிற்சிக்கு செல்ல முடியாத ஏழை, எளிய மாணவர்களுக்கு 7.5 உள் இட ஒதுக்கீடு வழங்கியதன் மூலம் 2,160 மாணவர்கள் இன்று மருத்துவம் படித்து வருகின்றனர். இவர்கள் நீட் தேர்வை ரத்து செய்வதாக கூறி இன்று வரை என்ன செய்தார்கள் ? அதிமுக ஆட்சியில் 11 அரசு மருத்துவக்கல்லூரி, 6 சட்டக்கல்லூரி கொண்டு வந்தோம். திமுக ஆட்சி அமைத்த இந்த 3ஆண்டுகளில் இப்படி நல்ல ஒரு திட்டத்தை செயல்படுத்தினார்களா ? சிறுபான்மை மக்களுக்கும், இஸ்லாமியர்களுக்கு எண்ணற்ற திட்டங்களை அதிமுக ஆட்சியில் செய்து கொடுத்துள்ளோம். இது போன்ற பல திட்டங்கள் மீண்டும் வர வேண்டுமென்றால் மக்கள் அதிமுக கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரிக்க வேண்டும் என்றார் ஒற்றை விரலால் ஓங்கி அடிப்போம்...!! வாக்களிப்போம் இரட்டை இலைக்கு...!! எனக்கூறி பரப்புரையை முடித்தார். இந்நிகழ்ச்சியில், அதிமுக முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, சட்டப்பேரவை உறுப்பினர்கள், கட்சி நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story