அம்மு to அம்மா...அரசியல் தாண்டிய ஜெயலலிதாவின் மறுப்பக்கம்..!

அம்மு to அம்மா...அரசியல் தாண்டிய ஜெயலலிதாவின் மறுப்பக்கம்..!
ஜெயலலிதா பிறந்த நாள்
எந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு ஆதரவுகள் இருக்கிறதோ, அந்த அளவுக்கு அவருக்கு எதிராக விமர்சனங்களும் வைக்கப்பட்டு வருகின்றன.

மறைந்த முன்னாள் முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாளருமான மறைந்த ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாளை அதிமுக தொண்டர்கள் கேக் வெட்டி கொண்டாடினர். தமிழக அரசியலில் பெரிய பிரளயத்தை ஏற்படுத்தி ஏற்ற, இரக்கங்களை கண்ட ஜெயலலிதாவின் வாழ்க்கை பயணத்தை திரும்பி பார்ப்போம்.

திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கத்தை பூர்வீகமாக கொண்டவர் சந்தியா என்ற வேதவல்லி. இவருக்கும், அன்றைய மைசூர் மகாராஜா கிருஷ்ணராஜேந்திர உடையாரின் அரண்மனை மருத்துவர் டாக்டர் ரங்காச்சாரியின் மகன் ஜெயராமுடன் திருமணம் நடந்தது. ரங்காச்சாரி மைசூரில் பிரபலமான மருத்துவர் என்பதால், அந்தஸ்துடன் வாழ்ந்து வந்தார்.

அப்போது சந்தியா-ஜெயராமன் தம்பதிக்கு இரண்டாவதாக இதே நாளில் 1948ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்தது. மைசூர் அரண்மனையில் சிறப்பான சேவையாற்றியதற்காக அரண்மனை வாரிசுகளுக்கே உரிய பெயரின் முன் ஜெய என்று சேர்க்கும் பெருமைமிக்க தகுதியை மைசூர் மன்னர், ரங்காச்சாரி குடும்பத்திற்கு வழங்கியிருந்தார். அதன்படி பிறந்த பெண் குழந்தைக்கு ஜெயலலிதா எனப் பெயர் சூட்டப்பட்டது. இப்படி தான் ஜெயலலிதாவின் பெயருக்கு வரலாறு உண்டு. இருந்தாலும் சந்தியா தனது மகளை செல்லமாக அம்மு என்றே அழைத்து வந்தார். ஜெயலலிதாவின் ஒரு வயதில் தந்தை மறைந்தார்.

அதனால் அம்முவை அழைத்து கொண்டு அவரது தாய் சந்தியா சென்னை வந்தார். ஜெயலலிதாவுக்கு நான்கரை வயது இருக்கும்போது, சந்தியாவுக்கு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததும், தனது இரு குழந்தைகளையும் தங்கை வித்யாவதியிடம் கொடுத்து விட்டு சந்தியா நடிக்க சென்றார். சினிமாவில் பிசியாக நடித்து வந்த சந்தியா தனது குழந்தைகளை பராமரிக்க முடியவில்லை என்பதால் பெங்களூருவில் உள்ல தாய் வீட்டில் அனுப்பி வைத்தார். அங்கு 10 வயது வரை தாத்தா, பாட்டி அரவணைப்பில் ஜெயலலிதா வளர்ந்து வந்தார். கான்வெண்ட் பள்ளியில் படித்த ஜெயலலிதா, ஆங்கிலத்தில் புலமை பெற்றார். படிப்பிலும் படுச்சுட்டியாக வளர்ந்தார்.

ஜெயலலிதாவுக்கு 10 வயது இருக்கும் போது, சந்தியா மீண்டும் குழந்தைகளை சென்னைக்கு அழைத்து வந்தார். சென்னையில் சர்ச் பார்க் கான்வெண்டில் படித்த ஜெயலலிதா பள்ளித்தேர்வில் மாநிலத்திலேயே முதல் மாணவியாக தேர்வு செய்யப்பட்டார். ஆங்கிலத்தில் மிக புலமை பெற்ற ஜெயலலிதா எதிர்காலத்தில் கல்லூரியில் ஆங்கில விரிவுரையாளாராக விரும்பினார். ஆனால், அவரது வாழ்க்கை சினிமா துறை பக்கம் அழைத்து சென்றது.

மிகவும் இளம் வயதில் சினிமாவில் நடிக்க தொடங்கிய ஜெயலலிதாவின் தாயின் கண்ணசைவில் அனைத்தையும் செய்து வந்தார். அவர் அணியும் உடை, அணிகலன்கள் என ஒவ்வொன்றும் சந்தியாவின் ஆணைப்படி தான் நடந்தன. தனது நடிப்பு மற்றும் ஆங்கில புலமையில் எம்ஜிஆர் மற்றும் சிவாஜி என்ற இரு ஜாம்பவான்களுடன் இணைந்து நடித்த ஜெயலலிதா, மக்கள் மனதில் இடம்பிடித்தார்.

சினிமா வாழ்க்கை ஜெயலலிதாவை அரசியல் பக்கம் ஈர்த்தது. ஜெயலலிதா சினிமாவுக்கு வந்த புதிதில் மிகப்பெரிய நடிகராக இருந்த எம்ஜிஆர் அரசியலில் களமிறங்கினார். பின்னர், தமிழக முதல்வரான எம்ஜிஆர். ஜெயலலிதாவை தனது கட்சியில் சேர்த்து கொள்கை பரப்பு செயலாளாராக்கினார். கட்சிக்கு வந்த சில மாதங்களில் ஜெயலலிதாவுக்கு மாநிலங்களவை பதவி கிடைத்தது. 1986ம் ஆண்டு மதுரையில் நடந்த மாநாட்டில் ஜெயலலிதா, எம்ஜிஆருக்கு ஆறடி உயர தங்க முலாம் பூசப்பட்ட செங்கோலை கொடுத்தார். பின்னர், அந்த செங்கோலை ஜெயலலிதாவிடமே, எம்ஜிஆர் கொடுத்தார். இதன் மூலம், தனது அரசியல் வாரி ஜெயலலிதா என்று சொல்லாமல் சொன்னார் எம்ஜிஆர்.

குறுகிய காலத்தில் கட்சியில் சேர்ந்து வளர்ந்து, எம்ஜிஆரின் நம்பிகையை ஜெயலலிதா பெற்றதால் கட்சியில் சிலருக்கு புகைச்சலை ஏற்படுத்தியது. அதேநேரம், 1987ம் ஆண்டு டிசம்பர் 24ம் ஆண்டு எம்ஜிஆர் மறைந்தார். அவரது மறைவுக்கு பிறகு தமிழகத்தில் குடியரசு தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தது. அப்போது இருந்த அதிமுக கட்சி எம்ஜிஆரின் மனைவியான ஜானகி அணி, ஜெயலலிதா அனி என இரண்டாக பிரிந்தது. அந்த நேரத்தில் சட்டமன்ற தேர்தலும் வந்தது. ஜெயலலிதாவுக்கு ஆதரவாக 21.15 சதவீத வாக்குகள் கிடைத்தன. ஜானகி அணிக்கு 9.19 சதவீத வாக்குகள் கிடைத்தன. அதேநேரம், அதிமுகவின் கட்சியும் ஜெயலலிதாவிடம் வசம் வந்து, இரட்டை இலை சின்னம் உறுதியானது. எம்ஜிஆர் மறைவுக்கு பிறகு இரு அணிகளாக இருந்த அதிமுக ஜெயலலிதாவின் தலைமையில் ஓரணியாக மாறியது. பின்னர், கட்சி நிர்வாகிகளின் ஒட்டு மொத்த முடிவுடன் அதிமுகவின் பொதுச்செயலாளராக ஜெயலலிதா தேர்வானார். ஜானகி ஓரம்கட்டப்பட்டார்.

பின்னர் 1991ம் ஆண்டு நடந்த சட்டமன்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக 168 தொகுதிகளில் போட்டியிட்டு 164 தொகுதிகளை கைப்பற்றியது. முதன் முதலாக தமிழகத்தின் முதல்வராக அறியணை ஏறினால் ஜெயலலிதா.

அடுத்த சில மாதங்களில் வளர்ப்பு மகனின் பிரமாண்ட திருமணம், சொத்துக்குவிப்பு வழக்கு, போலி என்கவுண்டர் உள்ளிட்ட நடவடிக்கைகளால் ஜெயலலிதா தோல்வியடைந்தார். பின்னர் 2001ம் ஆண்டு ஜெயலலிதா இரண்டாவது முறையாக தமிழக முதலமைச்சராக வெற்றிப்பெற்றார். தனது ஆட்சி காலத்தில் தொட்டில் குழந்தை திட்டம், இந்தியாவில் முதல் கமாண்டோப் படையை உருவாக்கியது, தாலிக்கு தங்கம், மாணவர்களுக்கு மடிக்கணினி, மலிவு விலையில் அம்மா உணவகம் என ஜெயலலிதா கொண்டுவந்த பெண்களுக்கான நலத்திட்டங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அடுத்தடுத்து ஏறுமுகமாகவே இருந்த ஜெயலலிதா, அரசியல் கட்சி தலைவர்களை தனது கண்ணசைவில் வைத்திருந்தார். இவரது ஆட்சியில் வீரப்பன் என்கவுண்டர் உள்ளிட்ட மிக முக்கிய சம்பவங்களும் அரங்கேறின. எந்த அளவுக்கு ஜெயலலிதாவுக்கு ஆதரவுகள் இருக்கிறதோ, அந்த அளவுக்கு அவருக்கு எதிராக விமர்சனங்களும் வைக்கப்பட்டு வருகின்றன.

இந்த சூழலில் 2016ம் ஆண்டு உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட ஜெயலலிதா 2 மாதங்கள் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை யாரும் சந்திக்காத நிலையில் 2016ம் ஆண்டு டிசம்பர் 5ம் தேதி மறைந்ததாக அறிவிக்கப்பட்டது. அன்றுடன் தமிழக அரசியலில் ஜெயலலிதா என்ற சகாப்தத்திற்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.

Tags

Next Story