மதுரையில் 9ம் தேதி அதிமுக உண்ணாவிரதம்: எடப்பாடி பழனிசாமி
Edapadi palanisamy
மதுரையில் 9ம் தேதி அதிமுக உண்ணாவிரத போராட்டம் நடைபெறும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக இளைஞர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் என்று 5 ஆண்டுகளில் 50 லட்சம் வேலைவாய்ப்புகள் வழங்கப்படும். அரசுத் துறைகளில் 5.50 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்; மாணவர்களின் கல்விக்கடன் ரத்து செய்யப்படும் என்பது உள்ளிட்ட தி.மு.க.வின் தேர்தல் வாக்குறுதிகளை உடனடியாக நிறைவேற்றிட வலியுறுத்தி அ.தி.மு.க. புரட்சித்தலைவி பேரவை சார்பில், 9-ந்தேதி (புதன்கிழமை) காலை 9 மணிமுதல் மாலை 5 மணிவரை, ''மதுரை பழங்காநத்தம், ஜெயம் தியேட்டர், எம்.ஜி.ஆர்.திடலில்'' முன்னாள் அமைச்சர் உதயகுமார் தலைமையில், கழக புரட்சித் தலைவி பேரவை மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் முன்னிலையில் மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெறும். இந்த உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னாள் அமைச்சர்கள் திண்டுக்கல் சீனிவாசன், செல்லூர் ராஜூ ஆகியோர் தொடங்கி வைப்பார்கள். முன்னாள் அமைச்சர் நத்தம் விசுவநாதன், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் ராஜன் செல்லப்பா ஆகியோர் முடித்து வைப்பார்கள். தி.மு.க. அரசைக் கண்டித்து மதுரை மாவட்டத்தில் நடைபெற உள்ள இந்த மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் கழக புரட்சித் தலைவி பேரவை மாநில நிர்வாகிகள், மாவட்டச் செயலாளர்கள் மற்றும் மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி, பகுதி அளவில் பணியாற்றி வரும் புரட்சித் தலைவி பேரவை நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்து கொள்ள வேண்டும். மக்கள் நலனை முன்வைத்து நடைபெற உள்ள இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில், பொதுமக்களும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.