அதிமுக வேட்பாளர் ராயபுரம் மனோ சப்பாத்தி சுட்டு வாக்கு சேகரிப்பு
அதிமுக வட சென்னை வேட்பாளர் ராயபுரம் மனோ இன்று பெரம்பூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் தனது 12 ஆவது நாள் பிரச்சாரத்தை இன்று வியாசர்பாடி, கக்கன்ஜி நகர் அம்மன் கோவில் தெருவில் உள்ள ஶ்ரீ தேவி பெரியபாளயத்தம்மன் கோவிலில் தரிசனம் செய்த பின் தொடங்கினார். அப்போது செய்தியாளர்களை சந்தித்தவர், மக்கள் ஆரவாரத்துடன் ஆரத்தி எடுத்து மலர் தூவி மகிழ்ச்சியாக வரவேற்பு அளிக்கிறார்கள். மத்திய மாநில அரசுகள் மீது மக்கள் கடுமையான கோபத்தில் உள்ளார்கள். இரட்டை இலையின் அலை ஆரம்பமாகிவிட்டது. மக்களை பார்க்கும்பொழுது எங்கள் வெற்றி உறுதி என்று தெரிகிறது. விலைவாசி உயர்வு, மின் கட்டணம், பால் விலை, சொத்து வரி உயர்வு குழந்தைகள் சாப்பிடும் ஐஸ்கிரீம் கூட விலை உயர்ந்து விட்டது மக்கள் சந்தோஷமாக இருக்கிறார்கள் என்று சொல்லும் தைரியம் ஸ்டாலின் ஒருவருக்கு மட்டும் தான் உள்ளது. பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமான் தான் அவருக்கு பேசுவதெல்லாம் பொய் தான்.
பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவது ஆறு மாதத்தில் 6000 தான் சென்று சேர்ந்திருக்கும் அனைவரும் அதன் மூலம் மகிழ்ந்து விடுவார்களா?. மக்கள் நலனில் உண்மையான அக்கறை இல்லை தேர்தலுக்காக வாக்குறுதி கொடுக்கிறார்கள் உண்மையாக மக்கள் மீது அக்கறை உள்ள இயக்கம் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம், எங்கள் வாக்குறுதி மக்களுக்கானது அவர்கள் வாழ்வாதாரம் உயர வேண்டும் என்று கொடுக்கப்படுவது, திமுகவின் வாக்குறுதி தேர்தலுக்காக கொடுக்கப்படுவது அவர்கள் கனவு நிச்சயம் பலிக்காது. ஒரு வருடத்திற்கு ஒரு லட்சம் பத்தாயிரம் கோடி ரூபாய் வரை சராசரியாக கடன் வாங்குகிறார்கள். அவர்களின் திறமையற்ற திராணியற்ற நிர்வாகத்தால் தான் இப்படி உள்ளது யார் மீதும் பழி போடக்கூடாது. இவ்வளவு விலையை உயர்த்தி மக்கள் மீது வரியை சுமத்திய பிறகும் எதற்கு இவ்வளவு கடன் வாங்க வேண்டும் என்று மக்கள் சிந்திக்க வேண்டும். இவர்களிடம் அடுத்த ஐந்து ஆண்டுகளை கொடுத்தால் தமிழகமே திவால் ஆகிவிடும் என்றார். தொடர்ந்து கக்கன்ஜி நகர் பகுதியில் வாக்கு சேகரித்த போது வழியெங்கும் மக்கள் ஆரத்தி எடுத்தும் மலர் தூவியும் வரவேற்றனர். அப்போது உணவு கடை ஒன்றில் சப்பாத்தி போட்டு வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார், அதிமுக வட சென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர் ராயபுரம் மனோ, தொடர்ந்து கடை உரிமையாளரிடமும் அருகில் இருந்த பொது மக்களிடமும் துண்டு பிரசுரங்களை அளித்து வாக்கு சேகரித்தார்.