தமிழகத்தில் புத்தாண்டில் ரூ.430 கோடிக்கு மது விற்பனை!!
Tasmac
தமிழ்நாட்டில் உள்ள 38 மாவட்டங்களில் 4,829 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இந்த கடைகளுடன் இணைந்த நிலையில் 2,919 மது அருந்தும் பார்களும் இருக்கின்றன. டாஸ்மாக் மதுக்கடைகளில் தினமும் சராசரியாக ரூ.150 கோடிக்கும், வார இறுதி நாட்களில் ரூ.200 கோடிக்கும், பண்டிகை காலங்களில் ரூ.250 கோடிக்கும் மது விற்பனை நடைபெறுகிறது. அந்த வகையில், இந்த ஆண்டு புத்தாண்டு தினத்தில், டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1-ந்தேதிகளில் 2 நாட்கள் ரூ.400 கோடிக்கு மது விற்பனை நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அதையும் தாண்டி மது விற்பனை நடைபெற்றுள்ளதாக தெரிகிறது. 38 மாவட்டங்களில் உள்ள மாவட்ட மேலாளர்கள் அந்தந்த பகுதிகளில் மது விற்பனை நிலவரத்தை தெரிவித்த நிலையில், சென்னை, திருச்சி, சேலம், மதுரை, கோவை ஆகிய 5 மண்டல மேலாளர்கள் விற்பனை விவரத்தை வெளியிடவில்லை. இதேபோல், சென்னையில் உள்ள டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் இருந்தும் புத்தாண்டு மது விற்பனை தொடர்பாக எந்த தகவலும் வெளியாகவில்லை. ஆனாலும், டிசம்பர் 31, ஜனவரி 1-ந்தேதிகளில் சுமார் ரூ.430 கோடிக்கு மது விற்பனை நடைபெற்று இருப்பதாக கூறப்படுகிறது. அண்டை மாநிலங்களுடன் ஒப்பிடும்போது புத்தாண்டு மது விற்பனையில் தமிழ்நாடே முதலிடம் பிடித்துள்ளது. அதாவது, தெலுங்கானாவில் ரூ.402 கோடிக்கும், ஆந்திராவில் ரூ.328 கோடிக்கும், கர்நாடகாவில் ரூ.308 கோடிக்கும், கேரளாவில் ரூ.108 கோடிக்கும் (டிசம்பர் 31-ந்தேதி மட்டும்), புதுச்சேரியில் ரூ.50 கோடிக்கும் மது விற்பனை நடந்துள்ளது. தமிழ்நாட்டில் டாஸ்மாக் மது விற்பனை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.45,855 கோடி வருவாய் கிடைக்கிறது. ஆயத்தீர்வை மற்றும் கலால் வரிகள் மூலம் இந்த அளவுக்கு பணம் கிடைக்கிறது என்றாலும், தமிழக அரசு வாங்கியுள்ள கடனுக்கு ஆண்டு வட்டித் தொகைக்கு கூட இந்தப் பணம் போதுமானது அல்ல. அதாவது, தமிழக அரசு வாங்கியுள்ள கடனுக்கு வட்டியாக ரூ.63,722 கோடியை ஆண்டுதோறும் கட்டிவருவது குறிப்பிடத்தக்கது.