மதுரை, திருச்சியில் டைடல் பூங்கா; கட்டுமான பணிகளை மேற்கொள்ள சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசிடம் விண்ணப்பம்!!
Tidel park
மதுரை மற்றும் திருச்சியில் டைடல் பூங்கா அமைக்க சுற்றுச்சூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் டைடல் பார்க் நிறுவனம் சார்பில் சென்னை மாவட்டத்தை தொடர்ந்து கோயம்புத்தூர், சென்னை பட்டாபிராம், ஆகிய மாவட்டங்களில் டைடல் பார்க் அமைக்கப்பட்டுள்ளது. இதேபோன்று டைடல் பார்க் நிறுவனத்தின் சார்பில் டைடல் நியோ பார்க் என்ற மினி டைடல் பூங்காவும் சேலம், தஞ்சாவூர், தூத்துக்குடி, திருப்பூர் ஆகிய மாவட்டங்களில் அமைக்கப்பட்டு வெற்றிகரமாக திறக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பின்படி, மதுரை, திருச்சி மாவட்டங்களில் டைடல் பார்க் அமைக்கும் நடவடிக்கையில் தற்போது அரசு இறங்கி உள்ளது. இந்த இரு டைடல் பூங்காக்கள் மூலம் 10,500 பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்றும் அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, மதுரையில் 40,000 சதுர அடி பரப்பளவில், ரூ.289 கோடியில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தரை மற்றும் 12 தளங்களுடன் டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது.திருச்சியில் 57,000 சதுர அடி பரப்பளவில், ரூ. 415 கோடியில் 5,000 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தரை மற்றும் 6 தளங்களுடன் டைடல் பூங்கா அமைக்கப்பட உள்ளது. இந்த நிலையில் மதுரை மற்றும் திருச்சியில் டைடல் பூங்காவுக்கான கட்டுமானப் பணிகளை மேற்கொள்ள சுற்றுசூழல் அனுமதி கோரி தமிழ்நாடு அரசிடம் விண்ணப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கான அனுமதி கிடைத்த உடன் இந்த பணிகள் அனைத்தும் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டைடல் பார்க்கும் அமைய இருப்பது திருச்சி, மதுரை மாவட்ட மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.