தனியார் நில வணிகத்துக்கு சாதகமாக ராசிபுரம் பஸ் நிலையம் மாற்றமா?: அன்புமணி ராமதாஸ்
Anbumani
தனியார் நில வணிகத்துக்கு சாதகமாக ராசிபுரம் பஸ் நிலையம் மாற்றமா என பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார். இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் அனைத்து வசதிகளுடன் பேருந்து நிலையம் செயல்பட்டு வரும் நிலையில், நகரத்திற்கு வெளியே 8.5 கி.மீ தொலைவில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நகராட்சிக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தனியார் நில வணிக நிறுவனத்திற்கு சொந்தமான நிலத்தின் மதிப்பை பல கோடி உயர்த்தும் நோக்குடன் எடுக்கப்பட்டுள்ள இந்த முடிவு கண்டிக்கத்தக்கது. இதன் பின்னணியில் அதிகார மையத்தில் இருப்பவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் கைமாறி இருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்படுகிறது. ராசிபுரம் நகர மக்கள் மற்றும் வணிகர்களின் வாழ்வாதாரத்தைச் சூறையாடும் இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனடியாக தலையிட்டு, படையப்பா நகரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். புதிய பேருந்து நிலையத்தை தனியார் நில வணிக நிறுவனத்துக்கு சாதகமாக படையப்பா நகரில் அமைக்க தீர்மானிக்கப்பட்டதன் பின்னணியில் நிகழ்த்தப்பட்ட பேரங்கள், நடந்த ஊழல்கள் ஆகியவை குறித்து விரிவான விசாரணை நடத்தவும் அரசு ஆணையிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.