தஞ்சாவூர் பெரியகோயிலில் இன்று அன்னாபிஷேகம்

தஞ்சாவூர் பெரியகோயிலில் இன்று அன்னாபிஷேகம்

பெருவுடையார்

ஐப்பசிமாத பவுர்ணமியை முன்னிட்டு,தஞ்சாவூர் பெரியகோயிலில் பெருவுடையாருக்கு இன்று பச்சரிசி, காய்கறி, இனிப்பு வகையால் அலங்காரம் செய்யப்பட்டு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.
தஞ்சாவூர் பெரியகோயிலில் கருவறையில் உள்ள பெருவுடையார் மிகப் பெரிய லிங்கத்திருமேனியாகும். ஆறடி உயரமும், 54 அடி சுற்றளவும் கொண்ட ஆவுடையார், அதன்மேல் 13 அடி உயரம், 23 அடி சுற்றளவும் உள்ள லிங்கம் எனத் தனித்தனி கருங்கற்களினால் செதுக்கப்பட்டு இணைக்கப்பட்டுள்ளது. இத்தகையை சிறப்பு மிக்க பெருவுடையாருக்கு ஐப்பசி பவுர்ணமி தினத்தில் அன்னாபிஷேகம் நடைபெறுவது வழக்கம். அதன்படி இன்று (அக்.28) ஐப்பசி மாத பவுர்ணமியை முன்னிட்டு பக்தர்கள் வழங்கும் அரிசியை சாதமாக தயார் செய்து, பெருவுடையார் திருமேனி முழுதும் சாத்தப்பட்டு, காய்கறிகள், பழங்கள், இனிப்பு வகைகளால் அலங்காரம் செய்யப்பட்டு, அன்னாபிஷேகம் நடைபெறவுள்ளது. இன்று இரவு சந்திரகிரஹனம் என்பதால் பிற்பகல் 3 மணிக்கே நடை திறக்கப்பட்டு, மகா தீபாராதனை காட்டப்பட்டு 7 மணி வரை தரிசனம் செய்யப்படவுள்ளது. பின்னர் இரவு 8 மணிக்கு நடைசாத்தப்படவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை தஞ்சாவூர் அரண்மனை தேவஸ்தானம் மற்றும் இந்து சமய அறநிலையத்துறையினர் செய்து வருகின்றனர்.

Tags

Next Story