பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து வந்த அண்ணாமலையார் திருத்தேர்
தேரோட்டம்
நினைத்தாலே முக்தி அளிக்கும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் விளங்கக்கூடிய அருள்மிகு அருணாசலேஸ்வரர் திருக்கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா கடந்த 17ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து கடந்த ஆறு நாட்களாக காலையும், மாலையும் இரு வேலைகளில் சுவாமி நான்கு மாட வீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்த நிலையில் முக்கிய திருவிழாவாக கருதப்படக்கூடிய ஏழாவது நாள் திருவிழாவான இன்று விநாயகர், முருகர், அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமுலையம்மன், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்திகளுக்கு திருக்கோயிலின் மூன்றாம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து பஞ்சமூர்த்திகளும் திருக்கோவிலின் 16 கால் மண்டபம் அருகே நிற்கவைக்கப்பட்டுள்ள பஞ்ச மூர்த்திகளின் மரதேர்களில் தனித்தனியாக எழுந்தருளினார்கள்.
அதனை தொடர்ந்து அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மன் சிறப்பு அலங்காரத்தில் 83 அடி உயரம் கொண்ட மகா ரதம் எனும் பெரிய தேரில் எழுந்தருள சிவாச்சாரியார்கள் தேரின் நான்கு சக்கரத்திற்கு சிறப்பு பூஜை செய்தனர். பின்னர் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பெரிய தேரை வடம் பிடித்து நான்கு மாட வீதிகளை சுற்றி அண்ணாமலையாருக்கு அரோகரா அண்ணாமலையருக்கு அரோகரா என்ற பக்தி கோசத்துடன் வடம் பிடித்து இழுத்து வழிபட்டு வந்தனர்.
முன்னதாக இன்று காலை விநாயகர், மற்றும் முருகர் தனித்தனியே மரத்தேரில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி நான்கு மாட வீதிகளை சுற்றி வலம் வந்து நிலையை அடைந்தது, அதனை தொடர்ந்து மகா ரதம் எனும் பெரிய தேர் புரப்பாடு நடைபெற்றது. நேற்று காலை முதல் நடைபெற்ற தேர்த் திருவிழாவில் திருவண்ணாமலை மாவட்டம் மட்டுமின்றி தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்து வருகின்றனர், பக்தர்களின் பாதுகாப்பு கருதி திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை சார்பில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.