ஆலந்தலையில் அடுக்குமாடி குடியிருப்புகள்: கனிமொழி எம்பி திறப்பு
நலத்திட்ட உதவிகள் வழங்கல்
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் வட்டம் ஆலந்தலை திட்டப்பகுதி ஐ ரூ ஐஐ-ல் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் ரூ.51.63 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 512 (பூ3) புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி ,
மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு அமைச்சர் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, தலைமையில் இன்று (15.02.2024) திறந்து வைத்து,
பயனாளிகளுக்கு குடியிருப்புக்கான ஒதுக்கீடு ஆணைகளை வழங்கி தெரிவித்ததாவது: தமிழ்நாட்டில் குடிசையற்ற வீடுகள் இருக்க வேண்டும் என்ற நோக்கில் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் குடிசை மாற்று வாரியத்தை தொடங்கி வீடற்ற ஏழைகளுக்கு வீடுகளை வழங்கினார். அதனைத்தொடர்ந்து முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் வழியில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு முதலமைச்சர் இத்துறையை தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம் என மாற்றி தற்போது வீடற்றவர்களுக்கு வீடு வழங்கி வருகிறார்கள்.
அதை மக்கள் முறையாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும். அதன்படி, திருச்செந்தூர் வட்டத்தில் பொருளாதாரத்தில் நலிவுற்ற நகர்ப்புற மற்றும் நகர்ப்புறத்தை சுற்றியுள்ள ஊரகப்பகுதிகளில் வசித்து வரும் ஏழை, எளிய குடும்பங்கள் பயன்பெறும் வகையில் திருச்செந்தூர் வட்டம் ஆலந்தலை கிராமத்தில் அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளுடன் ரூ.51.63 கோடி மதிப்பீட்டில் 512 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ளது.
இத்திட்டப்பகுதியில் ஒரு வீட்டிற்கான திட்ட மதிப்பீடு ரூ.10.16 இலட்சம் ஆகும். இத்திட்டத்தில் பயன்பெற ரூ.1,65,625 பங்களிப்பு தொகையாக அளித்து பயன்பெறலாம். இத்திட்டப்பகுதியில் ஒவ்வொரு வீடும் சுமார் 400 சதுரஅடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. ஒரு பிளாக்கிற்கு 64 வீடுகள் வீதம் 8 பிளாக்குகளாக மொத்தம் 512 வீடுகள் கட்டப்பட்டுள்ளது.
ஒவ்வொரு குடியிருப்பும் வசிப்பறை, சமையலறை, படுக்கையறை, குளியலறை மற்றும் கழிப்பறை போன்ற வசதிகளுடன் செராமிக் டைல்ஸ் தளமும் அமைக்கப்பட்டுள்ளது. எல்லாக் குடியிருப்புகளுக்கும் போதுமான காற்றோட்ட வசதி, தண்ணீர் வசதி, மற்றும் கழிவுநீர் வசதி செய்யப்பட்டுள்ளது. மேலும் இத்திட்டப்பகுதியில் தார் சாலை, மழை நீர் வடிகால், குடிநீர் வசதி, மழைநீர் சேகரிப்பு மற்றும் தெருவிளக்குகள் ஆகிய அடிப்படை வசதிகளும் அமைக்கப்பட்டுள்ளது. திருச்செந்தூர் நகராட்சி எல்லை பகுதிக்குள்ளும், நகராட்சியை சுற்றியுள்ள ஊரக பகுதிகளிலும் வசிக்கும் வீடற்ற பொருளாதாரத்தில் பின்தங்கிய பொதுமக்கள் பயன்பெறுவார்கள். இந்த குடியிருப்பில் குழந்தைகள் விளையாடுவதற்காக ஒரு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த வளாகத்திலேயே விரைவில் ஒரு பள்ளியும் அமைக்கப்பட உள்ளது.
தேவையான பொருட்கள் வாங்குதற்கு வணிகக்கடைகளும் கட்டப்பட இருக்கிறது. இப்பணிகள் அனைத்தும் விரைவில் கட்டப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு எல்லோருக்கும் வாய்ப்புகளை அளிக்கும் சமூக நீதியில் அக்கறை உள்ளஅரசாக செயல்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு கீழ் அடுக்கில் உள்ள வீடுகள் அவர்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கிறது. உங்கள் நண்பர்கள், உறவினர்களிடம் எடுத்துக்கூறி வீடு இல்லாதவர்கள் எல்லோரும் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ள வேண்டும். தொடர்ந்து உங்களோடு, உங்களுக்காக பயணிக்கக்கூடிய ஆட்சி தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் ஆட்சி என தெரிவித்தார். மீன்வளம்-மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் தெரிவித்ததாவது: தமிழ்நாடு முதலமைச்சர் ஆணையின்படி இன்று அனைவருக்கும் வீடு திட்டத்தின் கீழ் 512 புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் ரூ.51.63 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் வெள்ளமாக இருந்தாலும், புயலாக இருந்தாலும் மக்களை காக்கின்ற வகையில் சிறப்பாக பணியாற்றி வருகிறார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் சட்டமன்றத்தில், தமிழ்நாடு முழுவதும் அரசால் கட்டப்பட்டுள்ள வீடுகள் பழுதடைந்தால் அரசாங்கமே சரிசெய்து தரும் என்று அறிவித்துள்ளார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் ஏழை, எளிய மக்களை காக்கின்ற முதலமைச்சாரக விளங்கி வருகின்றார்கள். இந்த குடியிருப்பில் ரூ.1.65 லட்சம் கொடுத்தால் வீடு உங்களுக்கு சொந்தமாகும்.
இங்கு மின்சார வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. திருச்செந்தூர் பகுதியில் இருக்கின்ற வீடு இல்லாதவர்கள் இந்த குடியிருப்பில் வீடு பெற்று பயன்பெற வேண்டும். சுனாமி குடியிருப்பில் உள்ள 68 வீடுகள் மழைக்காலத்தில் பாதிக்கப்படுவதால் சாலைக்கு மேல் உயரமாக அந்த வீடுகளை கட்டித்தர வேண்டும் என்று தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் அவர்களிடம் கோரிக்கை வைத்து அவர்களும் கட்டித்தருவதாக உறுதியளித்துள்ளார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் தலைமையிலான அரசு ஏழை, எளிய மக்களை காக்கின்ற அரசாக விளங்கி வருகின்றது என தெரிவித்தார்.
முன்னதாக திருச்செந்தூர் அரசு மருத்துவமனையில் ரூ.1.25 கோடி செலவில் புதிதாக நிறுவப்பட்டுள்ள சி டி ஸ்கேன் இயந்திரத்தினை தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி , மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு அமைச்சர் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, தலைமையில் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக இயக்கி வைத்தார்கள்.
திருச்செந்தூரில் உள்ள ஆதரவற்றோர்களுக்கான மனநல காப்பகத்தில் தூத்துக்குடி பாராளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி , மீன்வளம், மீனவர் நலன் மற்றும் கால்நடை பராமரிப்பு அமைச்சர் அனிதா.ஆர்.ராதாகிருஷ்ணன் முன்னிலையில், மாவட்ட ஆட்சித் தலைவர் கோ.லட்சுமிபதி, தலைமையில் ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில், தூத்துக்குடி மாநகராட்சி மேயர் பெ.ஜெகன், திருவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் செ.ஊர்வசி அமிர்தராஜ், மாவட்ட ஊராட்சித் தலைவர் அ.பிரம்மசக்தி, திருச்செந்தூர் நகர்மன்ற தலைவர் ர.சிவ ஆனந்தி, திருச்செந்தூர் நகர்மன்ற துணைத் தலைவர் ஏ.பி.ரமேஷ், நிர்வாகப்பொறியாளர் (தமிழ்நாடு நகர்ப்புர வாழ்விட மேம்பாட்டு வாரியம், திருநெல்வேலி கோட்டம்) ஜெகன்நாதன், உதவி நிர்வாகப் பொறியாளர் ராஜாகொம்பையா பாண்டியன்,
உதவி பொறியாளர் ஜேம்ஸ் டேனியல், இணை இயக்குநர் (மருத்துவப்பணிகள்) (பொறுப்பு) மரு.பொன் ரவி, திருச்செந்தூர் தலைமை மருத்துவ அலுவலர் மரு.பாபநாசகுமார், அரசு அலுவலர்கள் மற்றும் மருத்துவர்கள் பலர் கலந்துகொண்டனர்.