மே 6 முதல் பொறியியல் படிப்புகளுக்கு விண்ணப்பம்
பைல் படம்
தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இளநிலைப் படிப்புகளான பிஇ, பிடெக், பிஆர்க் படிப்பில் மாணவர்களை சேர்பதற்கான கலந்தாய்வினை தொழில்நுட்பக் கல்வி இயக்கம் நடத்தி வருகிறது. அதன்படி 2024-25 ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைகான கலந்தாய்வினை நடத்துவதற்கு தொழில்நுட்க கல்வி ஆணையர் தலைவராகவும், அண்ணாப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் துணைத் தலைவராகவும், மாணவர் சேர்க்கைக்குழுவின் செயலளராக கோயம்புத்தூர் அரசு தொழில்நுட்பக்கல்லூரியின் பேராசிரியர் புருஷோத்தமன்,மற்றும் உறுப்பினர்களை நியமனம் செய்து உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திக் அரசாணை வெளியிட்டுள்ளார்.
அதனைத் தொடர்ந்து தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கையின் முதல் குழுவின் கூட்டம் தொழில்நுட்க கல்வி ஆணையர் வீரராகவராவ் தலைமையில் நடைபெற்றது- அதில் அண்ணா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் வேல்ராஜ், பதிவாளர் பிரகாஷ் உள்ளிட்டவர்கள் கலந்துக் காெண்டனர். தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரியில் 2024-25 ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்க்கைக்கான பணிகளை தமிழ்நாடு பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு துவங்கி உள்ளது. இந்தக்குழுவின் கூட்டத்தின் படி 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவுகள் மே 6 ஆம் தேதி வெளியான உடன் பொறியியல் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கு விண்ணப்பம் ஆன்லைன் மூலம் பெறப்பட உள்ளது.
மேலும் பொறியியல் படிப்பிற்கான கலந்தாய்வினை மருத்துவப்படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு முடிந்தப்பின்னர் நடத்துவதற்கும் திட்டமிட்டுள்ளனர். மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, தரமான கல்லூரியில் சேர்வதற்கும் , கடந்தாண்டுகளில் மாணவர்கள் சேர்ந்த எண்ணிக்கை குறித்த விபரங்களை கல்லூரி வாரியாக வெளியிடவும் திட்டமிட்டுள்ளனர். பொறியியல் மாணவர்கள் சேர்க்கை குறித்த அறிவிப்பு 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியான உடன் வெளியிடப்படும் எனவும் பொறியியல் மாணவர் சேர்க்கைக்குழு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் பொறியியல் கல்லூரிகளில் 2024-25 ஆம் கல்வியாண்டில் மாணவர்கள் சேர்ப்பதற்கான அங்கீகாரம் பெறுவதற்கு விண்ணப்பங்கள் ஜனவரி மாதம் முதல் மார்ச் 20 ஆம் தேதி வரையில் பெறப்பட்டுள்ளது. 2024-25 ஆம் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் அண்ணா பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் கிண்டி பொறியியல் கல்லூரி, அழகப்பா பொறியியல் கல்லூரி, கட்டிடக்கலை மற்றும் திட்டமிடல்பள்ளி (SAP), மெட்ராஸ் தொழில்நுட்ப கல்லூரி, அண்ணா பல்கலைக் கழகத்தின் உறுப்புக்கல்லூரிகள் 16, மத்திய அரசின் கல்லூரிகள் 5, தமிழ்நாடு அரசின் கல்லூரிகள் 11 , அரசு உதவிப் பெறும் 3 பொறியியல் கல்லூரிகள், சுயநிதிப் பொறியியல் கல்லூரிகள் 393 என 429 பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
மேலும் மாணவர்களுக்கு வேலை வாய்ப்பினை வழங்கும் கம்ப்யூட்டர் சார்ந்த கம்ப்யூட்டர் சயின்ஸ், டேட்டா சயின்ஸ், ஆர்டிபிஷியல் இன்டெலிஜென்ஸ் (AI ), சைபர் செக்யூரிட்டி உள்ளிட்ட கம்ப்யூட்டர் சார்ந்த பாடப்பிரிவுகளில் ஏற்கனவே உள்ள கல்லூரிகளில் 25 ஆயிரம் இடங்களில் மாணவர்கள் சேர்க்கைக்கும் முன்னணி கல்லூரிகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.