நிவாரண பணிகளை மேற்கொள்ள 8 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்

நிவாரண பணிகளை மேற்கொள்ள 8 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமனம்
வெள்ள பாதிப்பு 
தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள 8 மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர், வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மாநில நிவாரண ஆணையர் எஸ்.கே.பிரபாகர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது: தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழையின் காரணமாக அதிகமாக பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிவாரண பணிகளை மேற்கொள்ள மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் 8 பேர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

தூத்துக்குடி மாநகராட்சி, மாப்பிள்ளையூரணி ஊராட்சி பகுதிகளுக்கு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை செயலர் டி.கார்த்திகேயன், ஏரல், ஆவரங்காடு, இடையர்காடு, சிறுதொண்டாநல்லூர், ஆறுமுகமங்கலம், மாங்கோட்டகுப்பம், சம்படி மற்றும் சம்படி காலனி ஆகிய பகுதிகளுக்கு சிறப்பு திட்ட செயலாக்கத்துறை செயலார் தரேஸ் அகமது, மேல மங்கலகுறிச்சி, கீழமங்கலகுறிச்சி, அகரம், மஞ்சள்நீர்காயல், பழையகாயல், முக்காணி, கொற்கை, உமரிக்காடு பகுதிகளுக்கு சென்னை பெருநகர போக்குவரத்துக் கழக மேலாண்மை இயக்குநர் அல்பி ஜான் வர்க்கீஸ் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

ஸ்ரீவைகுண்டம், ஆழ்வார்திருநகரி மற்றும் கருங்குளம் ஊராட்சி ஒன்றிய பகுதிகளுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் இயக்குநர் பொன்னையா, ஆழ்வார்திருநகரி பேரூராட்சி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளுக்கு பதிவுத்துறை தலைவர் தினேஷ் ஆலிவர் பொன்ராஜ், வரதராஜபுரம், சிவராமமங்கலம், அப்பன்திருப்பதி, குலசேகரநத்தம், சாமிஊத்து, ஆழ்வார்தோப்பு, கோவங்காடு தெற்கு, கோட்டைக்காடு ஆகிய பகுதிகளுக்கு பேரூராட்சிகள் இயக்குநர் கிரண் குராலா ஆகியோர் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர்.

திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் வட்டங்களுக்கு நகராட்சி நிர்வாக இயக்குநர் சிவராசு, வாழவல்லான், ஆழ்வார்திருநகரி, அழகியமணவாளபுரம், செம்பூர், புன்னக்காயல், மேலஆத்தூர், திருப்புளியங்குடி, சின்னநட்டாத்தி, சூழவாய்க்கால் ஆகிய பகுதிகளுக்கு வருவாய் நிர்வாக கூடுதல் ஆணையர் கோ.பிரகாஷ் ஆகியோர் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்கள் அனைவரும் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களை மீட்டு அருகில் உள்ள பள்ளிகள் மற்றும் சமுதாய நலக்கூடங்களில் உருவாக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களில் தங்க வைத்து, உணவு பொட்டலங்கள் மற்றும் நிவாரண பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்தல், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வழங்க நடவடிக்கை எடுத்தல், சுகாதார துறையின் மூலம் மருத்துவ முகாம்கள் நடத்துதல், இறந்த விலங்குகளின் உடல்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தல், துண்டிக்கப்பட்ட மின்சார வசதியை வழங்க நடவடிக்கை எடுத்தல், முழுவதுமாக துண்டிக்கப்பட்ட பகுதிகள் ஏதேனும் இருப்பின் அந்த பகுதிகளுக்கு தொடர்பு ஏற்படுத்துதல், பாதிக்கப்பட்ட சாலைகளை புனரமைக்க நடவடிக்கை எடுத்தல் போன்ற பணிகளை மேற்கொள்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்

Tags

Next Story