குற்றவியல் துறை இயக்குநர் நியமனம்:தவறான முன்னுதாரணம் - இ.பி.எஸ் கண்டனம்..!

குற்றவியல் துறை இயக்குநர் நியமனம்:தவறான முன்னுதாரணம் -  இ.பி.எஸ் கண்டனம்..!

எடப்பாடி பழனிச்சாமி

தமிழக அரசின் தலைமை குற்றவியல் வழக்கறிஞராக கடந்த 2021 முதல் பணியாற்றி வந்த ஹசன் முகமது ஜின்னா தமிழ்நாடு அரசின் குற்றவியல்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டார்.

இதற்கு கண்டனம் தெரிவித்து எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, ''பொதுவாக முந்தைய குற்றவியல் நடைமுறைச் சட்டங்களின்படி தமிழ் நாடு அரசு பணியாளர் தேர்வு வாரியத்தின் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட துறை துணை தலைவராக பதவி உயர்வு கொடுத்து, அதன் பிறகு அவர் தலைவராக பொறுப்பேற்பது தான் மரபு.

மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டங்களைக் கடுமையாக எதிர்ப்பதாக ஒருபுறம் கூறிவிட்டு, மத்திய அரசு கொண்டு வந்த புதிய குற்றவியல் சட்டப்பிரிவு 20(2)(a) Bharatiya Nagarik Suraksha Sanhita 2023ன் படி,ஆயிரம் விளக்கு சட்டமன்றத் தொகுதியில் திமுக வேட்பாளராக போட்டியிட்ட வழக்கறிஞர் திரு. ஹசன் முகமது ஜின்னா அவர்களை, குற்ற வழக்கு தொடர்வுத் துறை இயக்குநர் (பொறுப்பு)-ஆக (Director of Prosecution Incharge) நியமித்திருப்பது விந்தையானது. அரசு துறையின் தலைவராக அரசியல் சார்புள்ள ஒருவரை இந்த விடியா திமுக அரசு நியமித்து அரசாணை வெளியிட்டுள்ளது தவறான முன்னுதாரணமாகும்.

ஒருபுறம் மத்திய அரசு கொண்டு வந்த குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை எதிர்ப்பதும், ஆர்ப்பாட்டம் செய்வதும், உண்ணாவிரதம் இருப்பதும், மறுபுறம் தனக்குச் சாதகமான உட்பிரிவை பயன்படுத்திக்கொள்வதுமாக தனது இரட்டை வேடத்தை அரங்கேற்றியுள்ளது. ஏற்கெனவே, பல ஆண்டுகளாக இந்த இயக்குநரகத்தில் பணிபுரியும் மூத்த அலுவலர்களுடைய நியாயமான பணி உயர்வு இதனால் பாதிப்படைந்துள்ளது. எனவே, அரசியல் சார்புள்ள வழக்கறிஞர் ஒருவரை குற்ற வழக்கு தொடர்வுத் துறை இயக்குநர் பதவிக்கு நியமிக்கக்கூடாது என்றும், வழக்கறிஞர் திரு. ஹசன் முகமது ஜின்னா அவர்களை அப்பதவியிலிருந்து திரும்பப் பெற வேண்டும் என்றும் விடியா தி.மு.க. அரசை வலியுறுத்துகிறேன்.'' என்று தெரிவித்துள்ளார்.

Tags

Next Story