ஆயுதப்படை போலீசார் மாரடைப்பால் உயிரிழப்பு !
உயிரிழப்பு
அரியலூர், ஏப்.8- ஜெயங்கொண்டத்தில் பணியில் இருந்த ஆயுதப்படை காவலர் திடீரென மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. பணிச்சுமை காரணமாக மன உளைச்சலால் போலீசார் உயிரிழந்து வருவது வாடிக்கையாகி விட்டது என பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஜமீன் குளத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் மகன் லீன்குமார் (வயது 28). இன்ஜினியரிங் படித்துவிட்டு கடந்த 2020 ஆம் ஆண்டு காவல்துறையில் பணியில் சேர்ந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. தற்போது அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில் அரியலூர் மாவட்ட ஆயுதப்படையில் இருந்து 6 போலீசாருடன், லீன்குமார் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் பாதுகாப்பிற்காக ஜெயங்கொண்டம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளிக்கு வந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது திடீரென அவருக்கு நெஞ்சு வலி ஏற்பட்டதாக தெரிகிறது.
பின்னர் உடல் நலம் பாதிக்கப்பட்ட அவரை அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஜெயங்கொண்டம் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதையடுத்து ஜெயங்கொண்டம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். காவல்துறையில் போலீசாருக்கு பணிச்சுமை அதிகம் இருப்பதாகவும், இதனால் மன உளைச்சலில் இருக்கும் போலீசாருக்கு போதிய கவுன்சிலிங் கொடுக்காமல் அலட்சியம் காட்டுவதால், இதுபோன்று இளம் வயதிலேயே போலீசார் மாரடைப்பில் உயிரிழந்து வருவது அதிகரித்து விட்டதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த சம்பவம் ஜெயங்கொண்ட பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.