Senthil Balaji: இரவோடு இரவாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த செந்தில் பாலாஜி - திமுக போட்ட பிளானா..?

senthil balaji

senthil balaji

Senthil Balaji: நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால், விரைவில் ஜாமீன் கிடைக்க வேண்டும் என்பதற்காக திமுக போட்ட திட்டமா..?

Senthil Balaji: இலாகா இல்லாத அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளது அரசியல் வட்டாரத்தில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

2015ம் ஆண்டு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு போக்குவரத்து துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி சிலரிடம் பணம் வாங்கியதாக கூறப்படுகிறது. தனது உதவியாளர்கள் மூலம் செந்தில் பாலாஜி பணம் பெற்றதாகவும், ஆனால் அரசு வேலையோ அல்லது பெற்ற பணத்தையோ செந்தில் பாலாஜி திரும்ப தரவில்லை என்று ஏமாந்தவர்கள் தரப்பில் புகார் அளிக்கப்பட்டது.

அதனடிப்படையில் வழக்கு பதிவு செய்த அமலாக்கத்துறை போலீசார் கடந்த ஜூன் மாதம் செந்தில் பாலாஜியின் வீடு, தலைமை செயலகத்தில் உள்ள அலுவலகம் உள்ளிட்ட பகுதிகளில் சோதனையில் ஈடுபட்டனர். அதை தொடர்ந்து கடந்த ஜூன் மாதம் 14ம் தேதி செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை போலீசார் கைது செய்ய முயன்றபோது நெஞ்சுவலி ஏற்பட்ட செந்தில் பாலாஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பின்னர் செந்தில் பாலாஜிக்கு இதயத்தில் அடைப்பு இருப்பது தெரியவந்ததால் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. பின்னர், மருத்துவமனையில் ஓய்வில் இருந்த செந்தில் பாலாஜி உடல்நலம் தேறியதும் அப்படியே அமலாக்கத்துறை போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறைக்கு அனுப்பப்பட்டார். பணம் மோசடி தொடர்பாக செந்தில் பாலாஜியிடம் அமலாக்கத்துறை போலீசார் விசாரணை நடத்தி வந்ததுடன், அவரது நீதிமன்ற காவலும் நீட்டிக்கப்பட்டது.

ஒவ்வொருமுறையும் ஜாமீன் கேட்டு செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்யும்போது அமலாக்கத்துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. செந்தில் பாலாஜிக்கு எதிராக 3000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்த அமலாக்கத்துறை போலீசார், அவரை வெளியில் விட்டால், சாட்சியங்கள் கலைக்கப்பட்டு வழக்கு விசாரணையில் தொய்வு ஏற்படும் என கூறப்பட்டது. அதேநேரம் சிறைக்கு சென்ற செந்தில் பாலாஜியை இலாகா இல்லாத அமைச்சராக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு அறிவித்தது.

தொடர்ந்து இலாகா இல்லாத அமைச்சராக 230 நாட்களுக்கு மேலாக சிறையில் இருக்கும் செந்தில் பாலாஜிக்கு எதிராக கடுமையாக விமர்சனங்கள் வைக்கப்பட்டன. நீதிமன்றமும், எதிர்கட்சிகளும் அவரின் அமைச்சர் பதவியை விமர்சித்து வந்தன. இதற்கிடையே அண்மையில் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை 19வது முறையாக நீட்டித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், டைநிலை ஊழியர் ஒருவர் குற்றவழக்கில் 48 மணி நேரம் சிறையில் இருந்தாலே உடனடியாக இடைநீக்கம் செய்யப்படுகிறார். ஆனால் குற்ற வழக்கில் செந்தில் பாலாஜி கடந்த 243 நாட்களுக்கும் மேலாக சிறையில் இருக்கிறார். அவர் எந்த அடிப்படையில் இலாகா இல்லாத அமைச்சராக பதவியில் நீடிக்கிறார்? இதன்மூலம் தமிழக அரசு என்ன சொல்ல வருகிறது என்றும் கேள்வி எழுப்பினார். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை மறந்துவிடக் கூடாது என்று அறிவுறுத்தினார்.

செந்தில் பாலாஜியின் வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இந்த சூழலில், தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்வதாக செந்தில் பாலாஜி கடிதம் எழுதுள்ளார். ஆளுநருக்கு அவர் அனுப்பியுள்ள கடித்தத்தில், “தனிப்பட்ட காரணங்களுக்காக பதவியில் இருந்து விலகுகிறேன்; உங்களது தலைமையின் கீழ் மக்களுக்கு பணியாற்ற வாய்ப்பு அளித்ததற்கு நன்றி. நீதிக்காக போராட எனக்கு தொடர்ந்து ஆதரவு அளித்த உங்களுக்கு நன்றி. நான் நிரபராதி உண்மையை வெளிக்கொண்டு வர சட்டரீதியாக தொடர்ந்து போராடுவேன். நீதித்துறை மீது எனக்கு முழு நம்பிக்கை உள்ளது விரைவில் நீதி வெல்லும்” என செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜியின் அமைச்சர் பதவி ராஜினாமா கடிதத்துக்கு ஆளுநர் ஆர்.என். ரவி ஒப்புதல் அளித்துள்ளார். அமைச்சராக இருப்பதால் ஜாமீன் கிடைப்பது தள்ளிப்போவதால் செந்தில் பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்தாரா என்று கேள்வி எழுந்துள்ளது. ஏற்கெனவே சிறையில் இருந்தபடி அமைச்சராக இருப்பதற்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததால், நாளை வழக்கு விசாரணை வருவதற்கு முன்பாக அவர் தனது பதவியை ராஜினாமா செய்திருப்பார் என்றும் கூறப்படுகிறது.

அதேநேரம், நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதால், விரைவில் ஜாமீன் கிடைக்க வேண்டும் என்பதற்காக திமுக தலைமை அறிவுறுத்தி அவர் தனது பதவியை ராஜினாமா செய்தாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.`

Tags

Next Story