தாயை பிரிந்த குட்டி யானை உயிரிழப்பு

நீலகிரி மாவட்டம் தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமில் கடந்த 19 நாட்களாக பராமரிக்கப்பட்டுவந்த ஆண் யானை குட்டி உடல்நலக் குறைவால் உயிரிழந்தது.

கோவை மாவட்டம் மருதமலை வனப்பகுதியில் தாயை பிரிந்த ஆண் யானை குட்டி முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டுவரப்பட்டு பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்றிரவு பரிதாபமாக உயிரிழந்தது.

கடந்த மே 30- ம் தேதி மருதமலை மலையடிவாரத்தில் 40 வயது மதிக்கத்தக்க பெண் காட்டு யானை உடல் நலக்குறைவால் வனப்பகுதியில் விழுந்து கிடந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று பெண் யானையுடன், ஒரு பிறந்து நான்கு மாதங்கள் ஆன ஆண் குட்டி யானை இருந்ததையும் உறுதி செய்தனர். எழ முடியாமல் இருந்த தாய் யானையின் அருகே அதனுடைய குட்டி யானையும் சுற்றி திரிந்தது. பெண் யானைக்கு சிகிச்சை அளித்த வனத்துறையினர் கிரேன் மூலம், பெல்ட் உதவியுடன் பெண் யானையை தூக்கி நிறுத்தி அதன் உடல் நிலை தேறிய பின் வனப்பகுதிக்குள் விடுவித்தனர்.

சிகிச்சை அளிக்கப்பட்டபோது அதனுடைய குட்டி யானை மற்றொரு யானை கூட்டத்துடன் சென்ற நிலையில் மீண்டும் தாய் யானை இருந்த இடத்தை தேடி குட்டியானை வந்தது. இதைக் கண்ட வனத்துறையினர் தாய் யானையுடன் எப்படியாவது குட்டி யானையை சேர்க்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டனர். அந்த முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. தாய் யானை குட்டியானையை அதனுடன் சேர்க்க மறுத்தது. குட்டி யானையும் வனத்துறையினரையே சுற்றி வந்தது. இதனால் தாய் யானையுடன் சேர்த்து வைக்கும் முயற்சியை கைவிட்ட வனத்துறையினர், குட்டியானையை எப்படி பாதுகாப்பாக பராமரிக்கலாம் என முடிவு செய்து ஒரு வழியாக ஜூன் 9- ம் தேதி நீலகிரி மாவட்டம் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமிற்கு கொண்டு செல்ல திட்டமிட்டனர்.

பிறகு குட்டி யானையை தனி வாகனம் மூலம் முதுமலை தெப்பக்காடு வளர்ப்பு யானைகள் முகாமுக்கு கொண்டு வந்தனர். கொண்டு வந்த முதல் நாளிலேயே குட்டி யானை 120 கிலோ எடை இருந்தது. ஆனால் தாயை பிரியும்போது குட்டியானையின் எடை 80 கிலோவாக இருந்தது என வனத்துறையினர் தெரிவித்திருந்தனர். லாக்டோஜன் புரத சத்து உணவு, இளநீர் போன்ற நீராதாரங்கள் வழங்கப்பட்டு குட்டியானை பராமரிக்க இரண்டு பாகன்கள் பணியமர்த்தப்பட்டனர். ஜூன்- 9 - ம் தேதிக்கு பிறகு அடுத்தடுத்த நாட்களில் குட்டி யானையை குழந்தை போல் வனத்துறையினர் பாதுகாத்து பராமரித்து வந்தனர் .

ஏற்கனவே இந்த யானைகள் முகாமில் தாயைப் பிறந்த இரண்டு குட்டி யானைகள் பராமரிக்கப்பட்டு வந்த நிலையில் அந்த குட்டி யானைகளுடன் இந்த குட்டி யானையும் நடைபயிற்சி மேற்கொண்டு நட்பாக சுற்றி திரிந்தது. இந்த மூன்று குட்டி யானைகளும் தெப்பக்காடு யானைகள் முகாமில் ஒன்றாக சுற்றித் திரிந்தன. ஆனால் நேற்று இரவு திடீரென குட்டியானைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது‌. அதிர்ச்சி அடைந்த வனத்துறையினர் யானை குட்டிக்கு என்னவானது என பரிசோதனை மேற்கொண்டனர். நேரம் செல்ல செல்ல குழந்தை போல் இருக்கும் குட்டி யானை உடல் நிலைமை கவலைக் கிடமானது எப்படியாவது குட்டியை காப்பாற்றி விட வேண்டும் என வனத்துறையினர் தீவிரம் முயற்சி செய்தும் இரவு 8: 45 மணிக்கு அந்த குட்டி யானை பரிதாபமாக உயிரிழந்தது.

குட்டி யானையின் உடலை உடற்கூறாய்வு செய்ததில் குடலில் அதிக இடங்களில் புண் இருந்ததாக தெரியவந்துள்ளது. இதன் காரணமாக குட்டி யானையின் உடல் பலவீனமாகி இறந்திருக்கலாம் என வனத்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் குட்டி யானையின் உள் உறுப்பு பாகங்கள் ஆய்வக பரிசோதனைக்கு சேகரிக்கப்பட்டு, அதன் உடல் எரியூட்டப்பட்டது .

Tags

Next Story