பக்ரீத் திருநாள் : எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து

பக்ரீத் திருநாள்  : எடப்பாடி பழனிச்சாமி வாழ்த்து

எடப்பாடி பழனிச்சாமி 

இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்தத் தியாகத்திற்கும் தயங்கமாட்டார்கள் என்ற தத்துவத்தைப் பறைசாற்றும் திருநாளாம் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் பக்ரீத் வாழ்த்துக்கள் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பக்ரீத் பண்டிகை வாழ்த்து செய்தி வெளியிட்டுள்ளார். அதில், இறை நம்பிக்கை உள்ளவர்கள் எந்தத் தியாகத்திற்கும் தயங்கமாட்டார்கள் என்ற தத்துவத்தைப் பறைசாற்றும் திருநாளாம் பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமியப் பெருமக்கள் அனைவருக்கும் எனது உளமார்ந்த தியாகத் திருநாள் நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன். இறைவனின் கட்டளையை ஏற்று தனது ஒரே மகன் இஸ்மாயிலை தியாகம் செய்ய முன்வந்த இறைத் தூதர் இப்ராஹிம் அவர்களின் ஈடு இணையற்ற தியாகத்தை நினைவு கூரும் தினமே பக்ரீத் திருநாளாகும்.

இறைவனின் விருப்பத்திற்கு கீழ்ப்படிந்து வாழ்வதே சிறந்த வாழ்க்கை நெறி என்று உலகிற்கு பறைசாற்றும் பொன்னாள் இந்நாளாகும். நாட்டின் வளர்ச்சிக்கும், சமுதாய முன்னேற்றத்திற்கும் தடைக் கற்களாகத் திகழ்கின்ற அதர்மம், அநீதி, சூழ்ச்சி, வன்மம் ஆகியவற்றை வேரோடும், வேரடி மண்ணோடும் ஒழித்து, நற்சிந்தனைகளும், நன்னெறிகளும் வெற்றிபெற எண்ணற்றத் தியாகங்களும், அர்ப்பணிப்புகளும் தேவைப்படும். இறைத் தூதரின் தியாகங்களை மனதில் நிலைநிறுத்தி, மனித நேயம் தழைக்க அர்ப்பணிப்பு உணர்வோடு பாடுபடுவோம் என இந்த பக்ரீத் திருநாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்போம்.

உலகில் அன்பும், அமைதியும் தழைத்தோங்கிட, அனைவரும் மனிதநேயத்துடனும், சகோதரத்துவத்துடனும், தியாகச் சிந்தனையுடனும் வாழ்ந்திட வேண்டும் என்று கூறி, அனைவரது வாழ்விலும் வளமும், நலமும் பெருகிட வேண்டும் என்ற என்னுடைய விருப்பத்தினைத் தெரிவித்து, இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும், எம்.ஜி.ஆர்., அம்மா ஆகியோரது தியாக வழியில், எனது இனிய பக்ரீத் திருநாள் நல்வாழ்த்துகளை மீண்டும் ஒருமுறை உரித்தாக்கிக்கொள்கிறேன்.

Tags

Next Story