தாமிரபரணி ஆற்றில் உறைகிணறுகள் அமைக்க தடை
மனு அளிக்க வந்தவர்கள்
தாமிரபரணி ஆற்றில் இயற்கை பேரிடரை ஏற்படுத்தும் உறை கிணறுகள் அமைக்க தடை விதிக்க வேண்டும் என்று முறப்பநாடு கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக தூத்துக்குடி மாவட்ட ஆட்சியரிடம் முறப்பநாடு பகுதி மக்கள் அளித்துள்ள மனுவில், ஸ்ரீவைகுண்டம் தாலுகாவில் தாமிரபரணி நதிகரையில் முறப்பநாடு, கோவில்பத்து, புதுகிராமம், படுக்கையூர் மற்றும் அகரம் கிராமம் அமைந்துள்ளது. இப்பகுதியை சார்ந்த மக்கள் விவசாயம், கால்நடை வளர்ப்பு, மற்றும் குடிநீர் அத்தியாவசிய தேவைகளை தாமிரபரணி ஆற்றை நம்பி அதன் நதிக்கரையில் பல ஆயிரம் வருடங்களாக தொன்றுதொட்டு வாழ்ந்து வருகின்றோம்.
முறப்பநாடு நதிகரைகளில் அருள்மிகு கைலாசநாதர் திருக்கோயில் அமைந்துள்ளதால் கோவிலுக்கு விஷேச நாட்களில் அதிக அளவில் பல மாநில மக்களும் வெளிநாட்டவர்களும் தரிசித்து ஆற்றில் குளித்து செல்கின்ற புள்னியதலமாகவும், சுற்றுலாத்தலமாகவும் அமையப் பெற்றுள்ளது. இந்த பகுதி தாமிரபரணி ஆற்றிலிருந்து 75 உறை கிணறுகள் மூலம் பல மாவட்டங்களுக்கும் குடிநீர் வழங்கப்படுகிறது. செலவை குறைக்கவும், ஒப்பந்ததாரர்கள் அதிக லாபம் ஈட்டவும் அனைத்து உறை கிணறுகளையும் எங்கள் பகுதியில் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளது. இதனால் இயற்கை பேரிடரின்போது அதிகப்படியான தண்ணீர் கிராமத்திற்குள் வருவதால் கால்நடைகள் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு, மக்கள் வீடுகளை இழந்தும் உயிர் போகும் நிலையில் இருந்து வருகின்றனர்.
எப்பொழுது தண்ணீர் கிராமத்திற்குள் வந்துவிடுமோ என்ற அச்சத்திலேயே மக்கள் உள்ளனர். எனவே, இந்த பகுதியில் உள்ள உறை கிணறுகளை அகற்றவும், புதிய கிணறுகள் அமைக்க தடை விதிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.