விசைப்படகு மீனவா்கள் 4ஆவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை!
தூத்துக்குடி கடற் பகுதியில் நுழையும் கேரள மீனவர்களை தடுக்க வலியுறுத்தி தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் 4ஆவது நாளாக கடலுக்குச் செல்லவில்லை.
தூத்துக்குடி மாவட்ட கடலோரப் பகுதிகளில் கேரள விசைப்படகு மீனவா்கள் இரவு நேரங்களில் மீன்படிப்பதைக் கண்டித்து, தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் கடந்த 19ஆம் தேதி முதல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இன்று வெள்ளிக்கிழமை 4ஆவது நாளாக மீனவா்கள் கடலுக்குச் செல்லவில்லை. தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் தினமும் காலை 5 மணி முதல் இரவு 9 மணி வரை மீன்பிடிக்க கடலுக்குச் சென்று வரும் நிலையில், இரவு 10 மணிக்கு மேல் இந்தப் பகுதிகளில் கேரள மீனவா்கள் வந்து மீன்பிடித்துச் செல்வதால் கடந்த 6 மாதங்களாக போதிய மீன்கள் கிடைப்பதில்லையாம்.
இதனால், கேரள மீனவா்களைக் கண்டித்து கடந்த 19ஆம் தேதி முதல் தூத்துக்குடி விசைப்படகு மீனவா்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், மீனவா்களுடன் மீன்வளத் துறை இணை இயக்குனா் காசிநாத பாண்டியன், உதவி காவல் கண்காணிப்பாளா் கேல்கா் சுப்ரமணிய பாலச்சந்திரா, கூடுதல் காவல் கண்காணிப்பாளா் உன்னி கிருஷ்ணன் உள்ளிட்டோா் பேச்சுவாா்த்தை நடத்தினா். இதில், தூத்துக்குடி மீனவா்களுக்கும் தங்குகடல் அனுமதி வேண்டும் என கோரிக்கை விடுத்தனராம். பேச்சுவாா்த்தையில் உடன்பாடு ஏற்படாததையடுத்து, தொடா்ந்து இன்றும் பேச்சுவாா்த்தை நடைபெறவுள்ளது. இப்பிரச்சனைக்கு சுமூக தீர்வு ஏற்படும் வரை கடலுக்கு செல்வதில்லை எனவும் மீனவா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.