பாரதியார் பிறந்த நாள்: எட்டையபுரத்தில் ஆட்சியர் மரியாதை
பாரதியார் பிறந்தநாள்
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் மகாகவி பாரதியார் மணிமண்டபத்தில் மகாகவி பாரதியாரின் 142வது பிறந்த நாளையொட்டி தமிழ்நாடு அரசின் சார்பில் மாவட்ட ஆட்சியர் கோ.லட்சுமிபதி, விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.வி.மார்க்கண்டேயன் முன்னிலையில் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: மகாகவி பாரதியார் எட்டயபுரத்தில் 1882ம் ஆண்டு டிசம்பர் 11ம் நாள் சின்னச்சாமிஐயருக்கும், இலட்சுமிஅம்மாளுக்கும் மகனாகப் பிறந்தார். பாரதியார் தமிழ்க்கவிதையிலும், உரைநடையிலும் சிறப்பான புலமை கொண்டு நவீன தமிழ்க்கவிதைக்கு முன்னோடியாக திகழ்ந்தார். எட்டயபுரம் மன்னர், பாரதியாரின் 11 வயதில் அவரது கவிதை பாடும் ஆற்றலைப் பாராட்டி பாரதி என்ற பட்டத்தினை வழங்கினார். பாரதியார் கவிஞர், எழுத்தாளர், இதழாளர், சமூக சீர்திருத்த சிந்தனையாளர், விடுதலைப்போராட்ட வீரர் என பன்முக ஆற்றல் கொண்டவராக விளங்கினார். பாரதியார் தனது கவிதைகள் மூலம் மக்களிடையே விடுதலை வேட்கையை தூண்டினார். ஏராளமான கவிதைகள், உரைநடைநூல்கள், நாடகங்கள், சிறுகதைகள் எழுதியுள்ளார். இந்தியாவிலேயே முதன்முதலாக நாட்டுடைமையாக்கப்பட்ட இலக்கியம் பாரதியாருடையதாகும். பாரதியார் சக்கரவர்த்தினி என்ற இதழை தொடங்கி அதில் வந்தே மாதரம் என்ற பாடலை தமிழில் மொழிபெயர்த்து வெளியிட்டார். இந்தியா என்னும் வார இதழையும், பாலபாரதம் என்னும் ஆங்கில இதழையும் பொறுப்பேற்று நடத்தி இந்திய விடுதலைக்காக பாடுபட்டார். தன்னுடைய பத்திரிக்கைகளில் சுதந்திர முழக்கத்தை தனது எழுத்துக்களின் மூலம் வெளிப்படுத்தினார்.என்றார்.