திருமாவளவனை புகழ்ந்த பாஜக வேட்பாளரால் பரபரப்பு

திருமாவளவன் என்ற பெயர் கொண்டவர்கள் எல்லோரும் நல்லவர்களாகதான் இருப்பார்கள் என செய்தியாளர் சந்திப்பில் சிதம்பரம் தொகுதி பாஜக பெண் வேட்பாளர் கார்த்தியாயனி தெரிவித்தது பாமக தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

சிதம்பரம் (தனி) தொகுதியில் பாஜக வேட்பாளராக கார்த்தியாயினி போட்டியிடுகிறார். இந்நிலையில் அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே காடுவெட்டியில் பாமக நிர்வாகிகளை மரியாதை நிமித்தமாக சந்தித்து ஆதரவு திரட்டினார். பின்னர் மறைந்த முன்னாள் பாமக எம்‌.எல்.ஏ காடுவெட்டி குருவின் மணிமண்டபத்தில் அவரது திருவுருவசிலைக்கு மரியாதை செலுத்தினார்.

பின்னர் பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது:- சிதம்பரம் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிடுகிறேன். பாமக ஆதரவு இல்லாமல் தாமரை மலராது. சிதம்பரம் தொகுதி வளர்ச்சிக்கு அயராது பாடுபடுவேன் என்றார். முன்னதாக செய்தியாளரிடம் தெரிவிக்கையில், திருமாவளவன் பெயர் கொண்டவர்கள் எல்லோரும் நல்லவர்களாகத்தான் இருப்பார்கள். அப்படித்தான் நான் பார்க்கிறேன் என்றார். அப்போது பாஜக கூட்டணியில் இருக்கும் பாமக தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது. பின்னர் மத்திய அரசு செயல்படுத்தும் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக பாமக போராட்டம் நடத்தி வரும் நிலையில் அது குறித்து, கேட்டபோது அதற்கும் மழுப்பலான பதிலை அளித்துவிட்டு பேட்டியை உடனடியாக முடித்துக் கொண்டு அங்கிருந்து கிளம்பினார். சிதம்பரம் தொகுதியில் திமுக கூட்டணி சார்பில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிடும் நிலையில், திருமாவளவன் பெயர் கொண்டவர்கள் எல்லோரும் நல்லவர்கள் என்று பாஜக வேட்பாளரே கூறியது பாஜக, பாமக தொண்டர்கள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியது.

Tags

Next Story