பாஜக களத்திலேயே இல்லை - எம்.பி.ரஞ்சன் குமார் அறிக்கை

பாஜக களத்திலேயே இல்லை - எம்.பி.ரஞ்சன் குமார் அறிக்கை

தேர்தல் பிரச்சாரம் தொடங்கியதிலிருந்து பாஜக களத்திலேயே இல்லை என எம்.பி.ரஞ்சன் குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.


தேர்தல் பிரச்சாரம் தொடங்கியதிலிருந்து பாஜக களத்திலேயே இல்லை என எம்.பி.ரஞ்சன் குமார் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கட்சியின் எஸ்சி எஸ்டி பிரிவு தலைவர் ரஞ்சன் குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில். தேர்தல் பிரச்சாரம் தொடங்கியதிலிருந்து பாஜக களத்திலேயே இல்லை. பிரச்சாரம் களைகட்ட தொடங்கியிருக்கும் நிலையில், அண்ணாமலைக்கே கோயம்புத்தூரில் பிரச்சாரம் செய்ய ஆள் இல்லை என்பது தான் கள நிலவரம் அதற்கு முன்பு வரை 18 சதவீதம் வாக்குகள் இருப்பதாக ஊடகங்கள் வழியே ஊதிக் கொண்டிருந்தவர்கள் தற்போது அமைதியாகி விட்டார்கள். ஆனால், தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய கட்சி பாஜக என்பது போல் பிம்பத்தை உருவாக்க முயன்று தோற்றுப்போனார்கள் இதுவரை மோடி தமிழ்நாட்டுக்கு வந்து பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்ட போது, வட இந்தியர்களை அழைத்துவந்து அமர வைத்திருந்தார்கள். அதுவும் எதிர்பார்த்த கூட்டம் வரவில்லை. கூட்டத்தில் எழுச்சி இல்லை. ஏதோ நாடகத்தைப் போல் அரங்கேற்றினார்கள். அதேசமயம் திமுக கூட்டணியின் பிரச்சாரக் கூட்டங்களைப் பார்த்து மிரண்டு போயிருக்கிறார்கள் பாஜகவினர்.

மக்கள் எழுச்சியைக் காண முடிகிறது. மோடிக்கும் அவரது மக்கள் விரோத நடவடிக்கைக்குத் துணை போன எடப்பாடிக்கும் எதிராகக் கூடும் கூட்டம் தான் அது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கடந்த மார்ச் 22-ம் தேதி, திருச்சியில் தேர்தல் பிரச்சாரப் பயணத்தைத் தொடங்கினார். இதுவரை இந்தப் பயணத்தில், இந்தியா கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக ஏறத்தாழ 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிலோ மீட்டர் தொலைவுக்குப் பயணம் செய்து 2 கோடிக்கும் மேற்பட்ட மக்களைச் சந்தித்துள்ளார். சென்ற இடமெல்லாம் முதலமைச்சரையும் கூட்டணிக் கட்சிகளையும் மக்கள் உற்சாகத்துடன் வரவேற்கிறார்கள். தமிழ்நாட்டுக்குத் துரோகம் செய்துவிட்டு எந்த முகத்துடன் இங்கு வருகிறீர்கள் என்று முதலமைச்சர் எழுப்பும் கேள்விக்கு மக்களின் கரகோஷம் விண்ணைப் பிளக்கிறது. இதுவோ நாற்பதும் நமதே என்பதைப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. இப்படி கூட்டம் கூடாததால் தமிழக பாஜக மிரண்டு போயிருக்கிறது. பிரச்சாரக் கூட்டங்களைத் தவிர்க்கும் வழி தான் ரோடு ஷோ. கோயம்புத்தூர் ரோடு ஷோ பிளாப் ஆனது..நேற்று சென்னையில் நடத்திய ரோடு ஷோவில் ஆட்களை திரும்பத் திரும்ப அழைத்து வந்து கூட்டத்தை காட்டி அம்பலப்பட்டனர். வட இந்தியர்களை தமிழ்நாடு முழுவதும் இருந்து அழைத்து வந்து சாலையோரங்களில் நிறுத்தியிருந்தனர். உணர்வுப்பூர்வ கோஷங்கள் இல்லை...கூலிக்கு கூவிச்சென்றார்கள். தமிழ்நாட்டில் மோடிக்கு செல்வாக்கு இருப்பதாக காட்டுவது தான் இவர்களின் நோக்கம். மோடியை பார்க்கப் பார்க்க தமிழ்நாட்டு மக்களுக்கு கோபம் அதிகரிக்கிறது என்ற உண்மையை மறந்து போனார்கள். போட்டியிடும் தொகுதிகளில் வெற்றி பெறுவதற்காக மோடி வரவில்லை. டெபாசிட்டையாவது காப்பாற்ற வேண்டும் என்பதே பாஜகவினர் நோக்கம். அதற்காக பிரதமர் அழைத்து வந்து மோடி மஸ்தான் வித்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். பாஜகவுக்கு மொத்தமே 150 தொகுதிகளுக்குள் தான் வெற்றி வாய்ப்பு இருப்பதாக ஆர்.எஸ்.எஸ் அமைப்பு எடுத்த கருத்துக் கணிப்பு தெரிவிப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுவே அதிகம் என்பதே எங்கள் கருத்து. பத்தாண்டு மோடி ஆட்சியில் அனைத்துத் தரப்பு மக்களும் சொல்லொண்ணா துயரம் அடைந்துள்ளனர். வடக்கே வேலைக்கு ஆகாது என்பதால் தெற்கே முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். அதுவும் தமிழ்நாட்டில் பிரதமர் மோடி அடிக்கடி பிரச்சாரம் செய்கிறார். குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழ்நாட்டில் பாஜக டெபாசிட் வாங்குவதே கடினம் தான். டெபாசிட்டை தக்க வைக்கவே பிரதமரை அழைத்து வந்து குரளி வித்தை காட்டிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியா கூட்டணியின் மாபெரும் வெற்றியும், பாஜகவின் முடிவுரையும் தமிழ்நாட்டிலிருந்து தான் எழுதப்பட்டுள்ளது. இந்திய ஒற்றுமை யாத்திரையை கன்னியாகுமரியிலிருந்து தான் தலைவர் ராகுல் காந்தி தொடங்கினார். இன்றைக்கு நாடு முழுவதும் பாஜகவுக்கு எதிராக மக்களைத் திரட்டியதில் தலைவர் ராகுல் காந்திக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் பெரும் பங்குண்டு. நாடு முழுவதும் ஏற்பட்டுள்ள எழுச்சியைப் பார்க்கும் போது நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்தியா கூட்டணிக்கு 370 தொகுதிகளுக்கும் அதிகமாக வெற்றி வாய்ப்பு இருப்பதாக வரும் தகவல்கள் மகிழ்ச்சி அளிக்கின்றன. இந்த பீதிதான் மோடியை அடிக்கடி தமிழ்நாட்டுக்கு வர வைத்திருக்கிறது. ரோடு ஷோ மட்டுமல்ல...எத்தனை ஷோ காட்டினாலும் தமிழ்நாட்டு மக்கள் பாஜகவையும் அதிமுகவையும் முற்றிலும் நிராகரிப்பார்கள்.

Tags

Next Story