தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

ஊட்டியில் இரண்டு பிரபல தனியார் பள்ளிகளுக்கு இ-மெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாடாளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பின்னர் ரோடுஷோ நிகழ்ச்சிக்காக பிரதமர் நரேந்திர மோடி நேற்று கோவை வந்தார். இதனால் கோவை மாவட்டம் முழுவதையும் போலீஸார் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். இந்நிலையில் நேற்று கோவையில் உள்ள 3 தனியார் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் அதே சமயத்தில் நேற்று இரவு நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள பிரபல இரண்டு தனியார் பள்ளிகளுக்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு உள்ளது. இரவு நேரம் என்பதால் பள்ளி நிர்வாகத்தினர் ஈ-மெயிலை கவனிக்கவில்லை. இன்று மிரட்டல் வந்த இ- மெயிலை பார்த்தனர். இதுகுறித்து தனியார் பள்ளி நிர்வாகத்தினர் ஊட்டி காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் அளித்தனர். இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவடிவேல் உத்தரவின் பேரில் ஊட்டி ஊரக காவல் ஆய்வாளர் விஜயலட்சுமி தலைமையிலான வெடிகுண்டு தடுப்பு நிபுணர்கள் 2 பள்ளிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டனர். மேலும் விக்கி, மதி ஆகிய இரண்டு மோப்ப நாயுடன் பள்ளி வளாகம் முழுவதும் சோதனை நடத்தப்பட்டது. ஆனால் சோதனை முடிவில் வெடிகுண்டுகள் எதுவும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "நீலகிரியில் முக்கிய இடங்களில் உள்ள பிரபல பள்ளிகளுக்கு ஈ- மெயில் மூலமாக ஆங்கிலத்தில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகிறது. ஆனால் சோதனை முடிவில் இந்த புகார்கள் புரளி என்பது தெரியவந்தது. அந்த ஈ-மெயிலில் எந்த காரணத்திற்கு என்று குறிப்பிடாமல் வெறுமனே வெடிகுண்டு வெடிக்கப்படும் என்று மட்டும் மிரட்டல் உள்ளது. அதேபோல் ஈ-மெயில் முகவரியில் உள்ள ஐ.பி., முகவரியை வைத்து அவர்களை அடையாளம் காணும் பணியை தீவிர படுத்தியுள்ளோம், "என்றனர். இதற்கிடையே சென்னை, கோவை, நீலகிரி உள்பட தமிழகத்தின் பல பகுதிகளிலும் ஒரே மாதிரி வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் இது குறித்து ஒருங்கிணைந்த சைபர் கிரைம் போலீஸாரும் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர். .......

Tags

Next Story