மாமூல் போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

மாமூல் போலீசார் ஆயுதப்படைக்கு மாற்றம்

பைல் படம் 

சட்டவிரோத மது விற்பனை கும்பல் குறித்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்காமல் மறைத்த திருச்சிற்றம்பலம் காவல்நிலைய தனிப்பிரிவு தலைமைக்காவலர் இளங்கோவன், எழுத்தர் சிவா ஆகியோரை ஆயுதப்படைக்கு மாற்றி எஸ்பி ஆஷிஷ் ராவத் உத்தரவிட்டார்.

கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயம் குடித்து சுமார் 50க்கும் மேற்பட்டவர்கள் இறந்தனர். இதையடுத்து தமிழகம் முழுவதும் காவல்துறையினர், கள்ளச்சாராயம் காய்ச்சும் நபர்கள், கள்ளச்சந்தையில் மதுபானம் விற்பனை செய்யும் நபர்கள் குறித்து விசாரணை நடத்த அந்தந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர்கள் மூலம் உத்தரவு பிறக்கப்பிக்கப்பட்டது.

மேலும், மது விற்பனை, கள்ளச்சாராயம் குறித்த தகவல்களை முறையாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு தெரியப்படுத்தாமல், விற்பனை செய்யும் நபர்களிடம் மாமூல் வாங்கி கொண்டு இருக்கும் காவல்துறையினர் குறித்து தனிப்பிரிவு காவல்துறையினர் கண்காணித்து, இடமாற்றம் செய்வதும் நடந்து வருகிறது. அதன்படி, தஞ்சாவூர் மாவட்டம் திருச்சிற்றம்பலம் காவல்நிலையத்தில் தனிப்பிரிவு தலைமைக்காவலர் இளங்கோவன், எழுத்தர் சிவா ஆகிய இருவரும் திடீரென ஆயுதப்படைக்கு மாற்றம் செய்யப்பட்டனர்.

சமீபத்தில் திருச்சிற்றம்பலம் காவல் சரக பகுதியில் போலி மதுபானம் தயார் செய்த கும்பலை தனிப்படை காவல்துறையினர் பிடித்தனர். மேலும், கள்ளத்தனமாக மதுவிற்பனை நடத்தும் கும்பலிடம் மாமூல் வாங்கிக்கொண்டு உயர் அதிகாரிகளுக்கு தகவல் அளிக்கவில்லை என்ற தகவலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் உறுதி செய்த பிறகு, சிவா, இளங்கோவன் இருவரும் இடமாற்றம் செய்யப்பட்டதாக காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.

கடந்த 2021ஆம் ஆண்டு திருச்சிற்றம்பலம் காவல் நிலையத்தில், திருட்டுத்தனமாக விற்கப்பட்ட 434 மது பாட்டில்களை, பறிமுதல் செய்து, சம்மந்தப்பட்டவர்களை கைது செய்யாமல் இருந்த விவகாரத்தில், அப்போதைய காவல் ஆய்வாளர் அனிதா கிரேசி, உதவி ஆய்வாளர் ராஜ்மோகன், சிறப்பு உதவி ஆய்வாளர் துரையரசன், தலைமை காவலர் ராமமூர்த்தி, தனிப்பிரிவு சிறப்பு உதவி ஆய்வாளர் பெத்தபெருமாள் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Tags

Next Story