மின் கம்பம் மாற்ற லஞ்சம் - மின்வாரிய அதிகாரிகள் கைது
மின் வாரிய அதிகாரிகள் கைது
நாமக்கல் மாவட்டம் வெப்படை அருகே உள்ள பாதரை கிராமத்தைச் சார்ந்த செல்வராஜ் என்பவர் தனது விவசாய நிலம், சிவா நகர் பகுதியில் உள்ளதாகவும், அதில் விவசாய நிலத்திற்கு நடுவில் உள்ள மின்கம்பம் தனக்கு இடையூறாக இருப்பதாகவும், அதை மாற்றி அமைக்க வேண்டி வெப்படை மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் உள்ள உதவி பொறியாளரை அணுகி, விண்ணப்பம் வழங்கி உள்ளார்.
இதன் அடிப்படையில் மின் கம்பம் மாற்றி அமைக்க திட்டம் வரைமுறை செய்ய 35 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த விவசாயி செல்வராஜ், நாமக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலிசாரிடம் புகார் அளித்துள்ளார். இந்த புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய 35 ஆயிரம் ரூபாயினை செல்வராஜ் இடம் கொடுத்து அழைத்துச் சென்றனர். லஞ்ச ஒழிப்புகாவல்துறை துணை கண்காணிப்பாளர் சுபாஷினி தலைமையில் 7 க்கும் மேற்பட்ட காவல்துறையினர் சென்றனர்.
அப்பொழுது விவசாயி செல்வராஜ் மின்சார வாரிய அலுவலகத்தில் சென்று உள்ளே இருந்த செயற் பொறியாளர் முத்துசாமி என்பவரிடம், ரசாயனம் தடவிய நோட்டுகளை வழங்கியுள்ளார். அப்பொழுது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு துறை காவல் துறையினர், மின்னலாய் உள்ளே சென்று செல்வராஜிடம் பணத்தை பெற்ற செயற் பொறியாளர் முனுசாமியை பிடிக்கும் பொழுது, அருகில் இருந்த உதவி பொறியாளர் ரஞ்சித் அந்த பணத்தை பெற்றுள்ளார். உடனடியாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் இருவரையும் கைது செய்து சுமார் மூன்று மணி நேரம் விசாரணை நடத்தினர். பின்னர் அவர்களை கைது செய்து போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். இச்சம்பவம் மின்சார வாரிய ஊழியர்களிடமும், வெப்படை பகுதியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.