குடியிருப்பு அருகே காலாவதியான மருந்துகள் எரிப்பு

X
காலாவதியான மருந்துகள் எரிப்பு
ஜெயங்கொண்டம் குடியிருப்பு பகுதியில் கோழிக்கு செலுத்தப்படும் காலாவதியான மருந்து பொருட்களை பொதுவெளியில் எரித்ததால் நோய் தொற்று பரவும் அபாயம் இருப்பதாக பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
அரியலூர், மே.10- ஜெயங்கொண்டம் நகர குடியிருப்பு பகுதியில், கோழிக்கு செலுத்தப்படும் காலாவதியான மருத்துவ கழிவுகளை, பொதுவெளியில் தீயிட்டு கொளுத்தியதால், நோய் தொற்று பரவும் அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் விசாலாட்சி நகரில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் இரவு நேரத்தில் காலாவதியான கோழிக்கு செலுத்தப்படும் மருத்துவ கழிவுகளை பொதுவெளியில் கொட்டி சிலர் எரித்துள்ளனர். மருந்துகள் எரிந்த போது கிளம்பிய கரும்புகைமூட்டத்தால், இப்பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசியதால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டது. அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் நாற்றம் பொறுக்க முடியாமல் அவதியுற்றனர். மேலும் சில மருந்துகள் எரிந்த நிலையிலும், சில மருந்துகள் எரியாத நிலையிலும் கிடப்பதால், நோய் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அச்சமடைந்த பொதுமக்கள் தங்கள் வீட்டு கதவுகள் மற்றும் ஜன்னலை மூடிக்கொண்டனர். வெயில் காலத்தில் இரவு நேரத்தில் வீட்டின் கதவு மற்றும் ஜன்னல்களை அடைத்துக் கொண்டதால் புழுக்கத்தில் இரவு முழுவதும் மக்கள் அவதியுற்றனர். காலைபிலும் புகை நாற்றம் தொடர்வதால், அப்பகுதியில் குடியிருக்கும் பொதுமக்கள் வெளியில் சென்று வர சிரமம் ஏற்பட்டது. விசாலாட்சி நகர் பகுதியில், ஜெயங்கொண்டம் சுற்றுவட்டார பகுதியில் உள்ள கோழி பண்ணைபில், கோழிக்கு செலுத்தப்படும் ஊசி, மருந்து உபகரணங்களை விற்பனை செய்யும் அலுவலகம் உள்ளது. இவர்கள் காலாவதியான மருந்துகளையும், மருத்துவக் கழிவுகளையும், பொதுவெளியில் போட்டு தொடர்ந்து எரித்து வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். மருத்துவத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து, மருத்துவக் கழிவுகளை எரிக்காமல் இதற்கென்று உள்ள ஏஜென்சிகளிடம் கொடுக்க உத்தரவு இடவேண்டும் என்று கோரிக்கை வைக்கும் பொதுமக்கள், இதனை மீறி மருத்துவ கழிவுகளை எரிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Next Story
